குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை INDIA கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் நாளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் மூன்று மாதங்களை எட்டவுள்ள நிலையில், இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. கலவரத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம் தங்கவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் சந்தித்தார்.
தொடர்ந்து, இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 21 எம்.பி.க்கள் குழு கடந்த வாரம் மணிப்பூர் பயணம் மேற்கொண்டு நிவாரண முகாம்களில் மக்களை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மாத கணக்காக வன்முறை நடக்கிறது, ஒரு FIR கூட பதிய முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு முடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுளார்.
இப்படி அனைத்து தரப்பிலும் மணிப்பூர் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ள நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து எடுத்துரைக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பில், மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹரியாணா கலவரம் குறித்தும், நாடாளுமன்றம் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.




