இந்தியாவில் நுழைந்ததா குரங்கு அம்மை வைரஸ்?

கொரோனா வைரஸ் பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை எனும் புதிய வைரஸ் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வரைஸ் பாதிப்பு இல்லை…

கொரோனா வைரஸ் பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை எனும் புதிய வைரஸ் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் இந்த வரைஸ் பாதிப்பு இல்லை என்பது சற்றே ஆறுதல் அளித்தாலும், உத்தரப் பிரதேசம் காஜியாபாத் நகரில் 5 வயது குழந்தைக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தக் குழந்தையிடம் பெறுபட்ட மாதிரிகளை ஆய்வுக்காக அந்த மாநில சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
காஜியாபாத் நகரில் கடந்த மாதம் 23ம் தேதி 5 வயது குழந்தையை காது தொடர்பான பிரச்னைக்ககாக மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அந்தக் குழந்தையின் உடம்பில் சொறி, அரிப்பு இருப்பதை உறுதி செய்த மருத்துவர் உத்தரப் பிரதேச சுகாதாரத் துறைக்கு உடனடியாகத் தகவல் அளித்தனர். இதையடுத்து, சுகாதாரக் குழு குழந்தையின் இல்லத்திற்குச் சென்று குழந்தையிடம் பரிசோதனைக்காக மாதிரிகளை எடுத்து, புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது. முதல் கட்ட சோதனையில், அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் அல்லது தலைவலி இல்லை என்பதும், கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டுக்கும் அந்தக் குழந்தை சென்று திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை குழந்தையை தனிமைப்படுத்துமாறு அவரது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.