புதுக்கோட்டையில் மொய் விருந்து விழா-ஒரே நாளில் ரூ.15 கோடி வசூல்

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து நடத்திய மொய் விருந்து விழாவில் ஒரே நாளில் 15 கோடி ரூபாய் மொய் வசூலாகி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அந்த விழாதாரர்கள்…

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து
நடத்திய மொய் விருந்து விழாவில் ஒரே நாளில் 15 கோடி ரூபாய் மொய் வசூலாகி
இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அந்த விழாதாரர்கள் உற்சாகம்
அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் மொய் விருந்து விழாக்கள் நடைபெறுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் கலை இழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டு
ஆண்டுகளுக்கு பிறகு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை
கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் கலை கட்ட தொடங்கியது.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள்
நிறைவடையும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் நெடுவாசல் கிழக்கு
கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரே பொது இடத்தில் மொய் விருந்து விழா
வைத்துள்ளனர்.

இந்த விழாவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 15 கோடி ரூபாய்
வரையில் மொய் வசூல் நடைபெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல்
ஆகியுள்ளது.

மேலும் அந்த விழாதாரர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா
50 லட்சம் ரூபாய் வரையில் மொய் தொகை வசூல் ஆகி உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அந்த மொய் விருந்து விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.