கலப்பு திருமணம்… 40 பேருக்கு மொட்டை அடித்த கிராம மக்கள் – சடங்கின் பேரில் தீண்டாமை!

ஒடிசா மாநிலத்தில் கலப்பு திருமணத்தைக் காரணம் காட்டி 40 பேருக்கு மொட்டை அடித்து சடங்கின் பேரில் கிராம மக்கள் தீண்டாமை இழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தை அந்த கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தார்கள் மீண்டும் கிராமத்துடன் இணைந்து வாழ, அங்குள்ள கோயிலில் சில சடங்குகளை செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

முன்னதாக அந்த பெண்ணின் குடும்பத்தார் அதற்கு மறுப்பு தெரிவிக்க, கிராம மக்கள் அந்த குடும்பத்தினரை தீவிரமாக ஒதுக்கி வைக்கவே, பின்னர் வேறு வழியின்றி கிராம மக்களின் வற்புறுத்தலின் பேரில் அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 40 பேர், அங்குள்ள கோயில் முன்பு விலங்குகளை பலி செலுத்தி, மொட்டை அடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அத்தொகுதி மேம்பாட்டு அதிகாரி விஜய் சோய் நடந்த இந்த தீண்டாமை சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு அதிகாரிகளை அந்த கிராமத்திற்கு அனுப்பினார். அத்துடன் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.