திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது என்றும், காவி அணிந்தவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அண்ணாநகரில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
மதுரையை மாநகராட்சியாக உருவாக கருணாநிதியே காரணம். சென்னைக்கு அடுத்து மதுரைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அமைத்து கொடுத்தது கருணாநிதி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க காரணம் கருணாநிதி தான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றதால் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்களும் கொரானா உடை அணிந்து கொரானா வார்டுக்குள் சென்றோம். எங்களை பார்த்து மருத்துவர்களும் பயமின்றி கொரானா சிகிச்சையை மேற்கொண்டனர்.
காவி அணிந்தவர்கள் எல்லாம் எங்கள் விரோதிகள் அல்ல , காவி அணிந்து நல்லது செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள். இனி திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்க முடியாது, திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது. எங்கள் தாய்மொழி தமிழ், எங்கள் சாமிக்கு எங்கள் மொழி தான் புரியும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற ஆன்மீக சாதனைக்கு வடிவம் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.” என எ.வ.வேலு தெரிவித்தார்.
முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பேச அழைக்காமல் அமைச்சர் எ.வ. வேலுவை மாவட்ட செயலாளர் தளபதி அழைத்தார். அப்போது அமைச்சர் எ.வ. வேலு, முதலில் பழனிவேல் தியாகராஜனை பேச சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் மாவட்ட செயலாளர் அவரை அழைக்காத நிலையில், அமைச்சர் வேலு பேச தொடங்கினார். அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் உங்களின் நேரத்தை எடுத்துக் கொண்டேன் என வேலு கூறினார். இறுதிவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு வழங்காதது குறிப்பிடத்தக்கது.
.




