மத்திய நிதி அமைச்சருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. சந்திப்பு!

டெல்லியில் 100 நாள் வேலை திட்ட நிதியை விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிர்மலா சீதாராமன்யிடம்
கடிதம் வழங்கினார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் புது டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அப்போது அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினர்.

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இன்று, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் இணைந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினோம்”

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.