ஜாமின் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் 28ஆம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். ஜாமின் தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி கூறினார்.
இதனைத்தொடர்ந்து ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேற்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தை அணுகினர். அப்போது ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுக்க உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி ரவி அறிவுறுத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தம்மால் ஜாமின் மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று முறையிட்டது.
அப்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் ஏற்கனவே விலகி இருந்தார். எனவே இந்த முறையீட்டு எப்படி ஏற்பது ? நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.
மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால் தான் தங்களிடம் முறையிடுகிறோம். நிர்வாகரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதும் என மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ கேட்டுக்கொண்டார்.
எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார். எனவே தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்தார்.







