ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுவதாக உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அந்த வரிசையில் தற்போது 1.77 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்து 2012 ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் மறுஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஓபிஎஸ் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்ற வழக்கு விசாரணை கேலி கூத்தாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எம்பி, எம்எல்ஏக்களுக்கு சட்டம் பொருந்தாது என்று அறிவித்துவிடலாம் என்று வேதனை தெரிவித்த நீதிபதி, ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதாக கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை அரசிலிருந்து விலகி செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2012ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தற்போது மறுஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என்று குறிப்பிட்டார். இதே போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.







