மதுரை அருகேயுள்ள ஜெயலலிதா கோயில், வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், சேவை மையமாகவும் செயல்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் அருகே, டி.குன்னத்தூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் 3 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என கூறினார். மேலும், ஜெயலலிதா கோயில் வழிபாட்டு தலமாக அல்லாமல், பொதுமக்களுக்கான சேவை மையமாகவும் செயல்பட உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த கோயிலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, போட்டித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என குறிப்பிட்டார். மேலும், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, மாதந்தோறும் இங்கே மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.







