சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணி மீதான வழக்குள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அண்மையில் நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி.எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதே போல் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆணடு தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் பொன்முடி உள்ளிட்டோரை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதற்கு என்ன காரணம் என்று சற்று வரிவாக பார்க்கலாம்.விழுப்புரம் மாவட்டம் பூத்துரை கிராமத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2011 வரை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் போலீசார் 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கௌதமசிகாமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றும் வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் கௌதமசிகாமணி ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு முடக்கியது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையின இன்று சோதனை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.






