அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ 12 மணி நேர வேலை சட்டத்திருத்தம், Dmk Files உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்தது அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அதில் இந்த ஆடியோவில் இடம் பெற்றிருக்கும் குரல் தன்னுடையது இல்லை. இது வேண்டும் என்றே மோசடி கும்பல்களால் சித்தரிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்திருந்தார். இதற்கு பிறகு பிடிஆர் தொடர்பான இரண்டாவது ஆடியோவை, அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
உடனடியாக இதற்கும் பதிலளிக்கும் விதமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு, அறிக்கையையும் வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பிரானேஷ் ராஜமாணிக்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் காரணங்களுக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என்று கூறிய தலைமை நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து ஆணையிட்டார். கிரிமினல் சட்டவிதிகளின் கீழ் போதிய நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருக்கும் போது, நீதிமன்றத்தை அரசியலுக்கான தளமாக பயன்படுத்தக் கூடாது என மனுதாரருக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா







