தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை வந்தார். அப்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும், வணிக வரித் துறை அமைச்சர் மகன் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், மதுரையில் வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமுக்கம், பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டும் போது மண் எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள்? தற்பொழுது நடைபெறுவதுதான் சமூக நீதி திராவிட மாடல் ஆட்சி.
நாகரீகமான முறையில் அரசியல் செய்ய வேண்டும். எனது மகன் திருமணத்தில் ஏழை எளிய மக்கள் ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் சமமாக அமர வைத்து சாப்பாடு கொடுத்தேன். 50 ஆயிரம் பேருக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் உணவு கொடுத்துள்ளேன்.

30 கோடி செலவு செய்துள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி கணக்கர் வேலை பார்த்தாரா? எனது மகன் திருமனத்திற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன்.
கரும்பு வாழை கட்டியது ஆடம்பரமா? திருமணத்திற்கு சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்வதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் திருமண செலவு குறித்து ஆய்வு நடத்தி கொள்ளலாம் என்றார் அமைச்சர் மூர்த்தி.







