தலையில் பலத்த காயத்துடன் சாலையில் விழுந்து கிடந்த முதியவரை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரிலேயே ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை வழியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காரில் சென்று கொண்டிருந்தபோது, மக்கள் சாலையில் கூட்டமாக நிற்பதை பார்த்து விசாரித்துள்ளார்.
அப்போது, முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனே, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரிலேயே அந்த முதியவரை ஏற்றிக்கொண்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.
பாதிக்கப்பட்டவர் யார் என்று விசாரித்ததில், சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த 72 வயதான மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்தது. சாலையில் நடந்து செல்லும்போது திடீரென மயக்கமடைந்து, மாரிமுத்து கீழே விழுந்ததும், அதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல், முதியவரை தனது காரிலேயே ஏற்றிச்சென்ற அமைச்சரின் செயலுக்கு, சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.







