இந்த வாரம் அபிஷன்ஜீவிந்த், அனஸ்வரா நடித்த வித்லவ், சாய்தன்ஷிகாவின் யோகிடா, புதுமுகம் லெனின், அஸ்மின் நடித்த ரெட்லேபிள் மற்றும் சிலம்பாட்டம் (ரீ ரிலீஸ்) ஆகிய படங்கள் வந்துள்ளன. இந்த படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வித்லவ்:
டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். மலையாளத்தில் சூப்பர் சரண்யா, குரூவாயூர் அம்பல நடையில் போன்ற படங்களில் நடித்த அனஸ்வரா ஹீரோயின். ஸ்கூல் டேஸ் லவ், இப்போதைய லவ் இரண்டையும் விவரிக்கும் கதை. இந்த படத்தை மதன் இயக்கியுள்ளார். ரஜினி இளைய மகள் சவுந்தர்யா, மகேஷ்ராஜ் பசிலியான் இணைந்து தயாரித்துள்ளனர்.
அக்கா திருமணத்துக்கு வற்புறுத்தும் நிலையில், ஒரு காபிஷாப்பில் அனஸ்வராவை சந்திக்கிறார் அபிஷன். இரண்டு பேரும் மனம் விட்டு பேசும் நிலையில், தங்களின் பள்ளிப்பருவ காதல்களை பற்றியும் விரிவாக பேசி, மலரும் நினைவுகளில் முழ்குகிறார்கள். அதெல்லாம் முதற்பாதி கதையாக இருக்கிறது. திடீரனெ அப்போதைய நம் லவ்வர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க இருவரும் ஆசைப்பட்டு திருச்சிக்கு செல்கிறார்கள். இது இரண்டாம் பாதி கதை. பள்ளியில் தான் காதலித்த காவ்யாவை ஹீரோ சந்தித்து பேசினாரா? தான் காதலித்த சக ஸ்டூண்ட் பாலாஜியை ஹீரோயின் அனஸ்வரா எந்த நிலையில் சந்திக்கிறார். அப்போது என்ன நடக்கிறது. காதலில் மாற்றம் நடந்ததா? காதலர்கள் மாறினார்களா? யாருக்கு யாருடன் திருமணம் என்ற ரீதியில் காதல், காமெடி கலந்து யூத்புல்லாக நகரும் கதை வித்லவ்.
ஹீரோவாக நடித்த அபிஷன் ஜீவிந்த் ஸ்கூல் ஸ்டூடண்ட், யூத்புல் இளைஞன் என இரண்டு கெட்அப்களிலும் பின்னி எடுத்து இருக்கிறார். குறிப்பாக, பள்ளி மாணவனாக காவ்யாவை காதலிக்க பயப்படுவது, நண்பர்கள் உதவியை நாடுவது, சில பிரச்னைகளை சந்திப்பது என பல இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவரின் அப்பாவிதனமான நடிப்பு, அழுகை, பயம் இதெல்லாம் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதேபோல், அவருக்கும் அனஸ்வராவுக்கும் இடையேயான காதல் சீன், சண்டை, சந்தேகமும் படத்துக்கு பிளஸ். குறிப்பாக, கிளைமாக்சில் அவர் செய்கிற விஷயமும், அடுத்து நடப்பதும் செம இண்ட்ரஸ்ட்டிங்.
ஹீரோயின் அனஸ்வரா பார்க்கவும் அழகாக இருக்கிறார், நடிப்பும் அழகு. அவரின் திருச்சி போர்ஷன் கலர்புல்லாக, கலகலப்பாக இருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும், அவரின் கோபமும் ரசிக்க வைக்கின்றன. அவர் பேச்சில் மட்டும் மலையாள வாடை வருதை தவிர்த்து இருக்கலாம். இவர்களை தவிர, அபிஷன் காதலித்தவராக வரும் காவ்யா வரும் சீன்களில் கைதட்டல் பறக்கிறது. குறிப்பாக, இடைவேளைக்குபின் அவர் வரும் காட்சிகள், பேசும் வசனங்கள் வித்லவ் படத்தின் மறக்க முடியாத காட்சிகளாகிவிட்டன. அனஸ்வரா காதலித்தவராக வரும் பாலாஜி போர்ஷன், அவரின் வசனங்களும் பிரஷ்.
திருச்சி வாத்தியாராக வருகிற பருத்திவீரன் சரவணன், ஹீரோ அக்காவாக ஆர்.ஜே.ஆனந்தி, அப்பா முருகேசன், ஹீரோ, ஹீரோயின் பள்ளி நண்பர்கள் என பலரும் படத்துக்கு பிளஸ். சென்னை போர்ஷன், திருச்சி போர்ஷன் இரண்டுமே கலகலப்பாக, காமெடியாக நகர்வது படத்தை விறுவிறுப்பாக்கி இருக்கிறது. ஷான்ரோல்டன் இசை, பாடல்கள் இந்த படத்தை இன்னும் ஒருபடி மேலே கொண்டு போய் இருக்கிறது. ஷ்ரேயாஸ்கிருஷ்ணா கேமரா வொர்க் அருமை.
படம் பார்க்கும் அனைவருக்கும் தங்களின் ஸ்கூல், அந்த கால நண்பர்கள், அப்போது ஏற்பட்ட காதல் அனுபவம், நண்பர்களின் காதல் சேட்டைகள் நினைவுக்கு வரும். அந்த லவ்வர் இப்போது எப்படி, எங்கே இருக்கிறாரா என்ற சின்ன ஏக்கம் வரும். கண்டிப்பாக, இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும், இந்த காதலை, டயலாக், சீன்களை கொண்டாடுவார்கள். மற்றவர்கள், நமக்கு இப்படிப்பட்ட அனுபவம், வாழ்க்கை அமையவில்லையே என்று பீல் பண்ணுவார்கள்”.
யோகிடா:
தனது நேர்மை காரணமாக அடிக்கடி டிரான்ஸ்பர் வாங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்தன்ஷிகா. அப்படி அவர் மாற்றலாகி வரும் சென்னை வியாசர்பாடி ஸ்டேஷனில் ஏகப்பட்ட பிரச்னை. அவர் டூட்டியில் சேர வரும் நாளில் வில்லன் கபீர்சிங் ஆட்கள் ஒருவரை கொலை செய்கிறார்கள். அந்த ஏரியாவில் அடிதடி, வெட்டு, குத்து, போதை மருந்து கடத்தல், கொலை, பெண்களை கடத்துதல் என ஏகப்பட்ட அராஜகம் செய்கிறார் கபீர்சிங். அதற்கு மத்திய அமைச்சராக இருக்கும் அவர் அண்ணன் ஷாயாஜிஷிண்டேயும் துணை. இருவரையும் பகைக்கிறார் சாய்தன்ஷிகா, வில்லன் ஆட்களை அடித்து உதைக்கிறார். இதனால், தனிப்பட்ட முறையில் சாய்தன்ஷிகாவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவர் வேலையும் பறி போகிற நிலையில், அதிலிருந்து மீண்டாரா? வில்லன் கும்பலை அழித்தாரா என்பது யோகிடா கதை.
இது, பக்கா ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஆக்ஷன் படம். அதை உணர்ந்து ஈடுபாட்டுடன் நடித்து இருக்கிறார் சாய்தன்ஷிகா. அவரின் அந்த கிராப் வைத்த ஹேர் ஸ்டைல், மிடுக்கான நடை, போலீஸ் உடை, பரபர வசனங்கள் பக்காவாக பொருந்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளில் சாய்தன்ஷிகா பல இடங்களில் மிரட்டியிருக்கிறார். டூப் போடாமல் நடித்த அவரின் அந்த அர்ப்பணிப்பை பாராட்டலாம். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி உட்பட, பல சண்டைகாட்சிகளை விறுவிறுப்பாக கொடுத்து இருக்கிறார் பைட்மாஸ்டர் கணேஷ். வில்லனாக வரும் கபீர்சிங், ஷாயாஜி நடிப்பு ஓகே. மறைந்த மனோபாலாவும் நல்ல போலீசாக வந்து செல்கிறார்.
வழக்கமான தாதா, போலீஸ் மோதல் என்ற ரீதியில் திரைக்கதை நகர்வது மைனஸ். தன்ஷிகா தவிர, மற்ற கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லாததும் மைனஸ். படத்தின் ஒரே பிளஸ் சண்டைக்காட்சிகள். அதிலும் தேசிய கொடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்சிகா போடும் சண்டையும், அப்போதும் பேசும் வசனங்களும் சிலிர்க்க வைக்கின்றன. பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் படமாகவும் யோகிடா இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து இருந்தால் படம் இன்னம் பேசப்பட்டு இருக்கும்.
விஜயசாந்தி நடித்த ஆக் ஷன் படம் மாதிரி இருக்க வேண்டும் என்று யோகிடாவை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம்கிருஷ்ணா. அதற்கு சாய்தன்ஷிகா நடிப்பும், உழைப்பும், சண்டைக்காட்சிகளும் ஓரளவு ஈடு செய்து இருக்கிறது. ஆக்ஷன் பிரியர்களுக்கு யோகிடா பிடிக்கும்.
ரெட்லேபில்:
ஒரு காலேஜில் ஸ்டூடண்ட் யூனியன் எலக்ஷன் நடக்கிறது. அதில் போட்டியிட்டு ஜெயிக்க நினைக்கிறான் எம்எல்ஏ மகன். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இன்னொரு மாணவன் ஜெயிக்கணும் என்று விரும்புகிறார்கள். சும்மா இருப்பானா, அரசியல்வாதி மகன். அனைவரையும் டார்ச்சர் செய்கிறான். அப்போது அதே கல்லுாரியில் படித்து, மாணவர் சங்க தலைவராக இருந்த ஹீரோ லெனின் கல்லுாரிக்குள் வருகிறார். நல்லவர்கள் இருக்கும் அணிக்கு சப்போர்ட் செய்கிறார். எம்எல்ஏ மகனை எதிர்கிறார், சண்டை வருகிறது.
எம்எல்ஏ மகள் அஸ்மின், லெனினை காதலிக்க, இன்னும் பிரச்னை பெரிதாகிறது. இதை கேள்விப்பட்டு முறை மாப்பிள்ளைக்கு அஸ்மினை கட்டி வைக்க நினைக்கிறார்கள் குடும்பத்தினர். கல்லுாரியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியின்போது காதலர்கள் ஓடிப்போய் திருமணம் செய்ய நினைக்கும் நிலையில், அதே கல்லுாரி வளாகத்தில் இன்னொரு வில்லனான அந்த முறை மாமன் கொல்லப்பட, போலீஸ் வருகிறது. அந்த கொலையை செய்து யார்? கல்லுாரிக்குள் வில்லன் உடலை மறைத்து, கொலையை மறைக்க நினைக்கும் ஹீரோ அன்ட் டீமின் திட்டம் ஜெயித்ததா? இதுதான் ரெட்லேபில் .கே.ஆர்.வினோத் இயக்கி இருக்கிறார்.
முதற்பாதி கல்லுாரி தேர்தல், காதல், மோதல் என செல்கிறது. இரண்டாம் பாதி கொலை, அதை மறைக்க நினைக்கும் திட்டம், போலீஸ் விசாரணை என நகர்கிறது. ஹீரோ லெனின் நடிப்பு ஓகே. ஹீரோயின் அஸ்மின் கிளைமாக்சில் செய்யும் சில விஷயங்கள் டுவிஸ்ட். எம்எல்ஏவாக வந்து வில்லத்தனம் செய்து அசத்தியிருக்கிறார் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். அவரும், அனுமோகனும் இருக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.
கல்லுாரி மாணவர் பிரச்னை, தேர்தல், காதல் ஆகியவற்றை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்து இருக்கலாம். இரண்டாம் பாதியில் இருக்கும் ஸ்பீடு, முதற்பாதியில் இல்லை. கல்லுாரி தேர்தல், சண்டைகாட்சிகள், பல படங்களில் பார்த்தது. அந்த கொலையை மறைக்க மாணவர்கள், ஹீரோ லெனின் போடும் திட்டம். அடுத்து நடக்கும் விஷயங்கள். தடயவியல் அதிகாரி, கல்லுாரி குற்றவியல்துறை பேராசியர் போர்ஷன் பிரஷ். கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராதது. புதுமுகங்கள் அதிகம் நடித்து இருந்தாலும், திரைக்கதையால் ரெட்லேபில் கொஞ்சம் ஈர்க்கிறது.
சிலம்பாட்டம்:
சரவணன் இயக்கத்தில் சிம்பு, சினேகா, ஷானாகான், சந்தானம், பிரபு நடித்த சிலம்பாட்டம் படமும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. 2008ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இரண்டை வேடத்தில் சிம்பு நடித்து இருந்தார்.
சந்தானம் காமெடி வொர்க் அவுட் ஆகி இருந்தது. பிளாஷ்பேக் காட்சிகள் பேசப்பட்டன. 17 ஆண்டுகளுக்குபின் சிலம்பாட்டம் மீண்டும் வந்துள்ளது.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்















