இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவையை தொடங்குவதற்கான ஏலத்தை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 5G அலைக்கற்றையின் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நான்காம் தலைமுறை இணையசேவையின் விரிவாக்கம் தான் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் 5G சேவையை சோதனை முறையில் முயற்சி செய்துள்ளன. இந்நிலையில், இந்தியாவிலும் விரைவில் 5G அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 5G அலைக்கற்றை ஏலத்தை நடத்துவதற்கான தொலைத்தொடர்புத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5G அலைக்கற்றை சேவை 20 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட உள்ளது.
ஜூலை இறுதிக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்தில் வோடஃபோன்-ஐடியா, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5G அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்தால் நிச்சயமாக தொழில்நுட்ப வளர்ச்சி புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.
5G சேவையின் பயன்கள்
5G வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புகள் மூலம் பயனர்களால் அனுப்பப்படும் தரவுகள் அதிவேகத்தில் சென்றடையும்.
5G தொழில் நுட்பத்தின் நேர தாமதம் 1 மில்லி வினாடிக்கு குறைவாகவே (low latency) இருக்கும். இதனால், தாமதம் தவிர்க்கப்பட்டு பயனர்களின் நேரம் மிச்சமாகும்.
4G அலைக்கற்றையை விட 5G அலைக்கற்றையின் வேகம் 10 மடங்கு அதிகம் ஆகும்.
5G சேவையால் ஒரு வினாடிக்கு 2 ஜிபி தரவுகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஒரே நேரத்தில் தரவுகளை பதிவேற்றவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
beam forming தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 5G சேவையில் NETWORK ERROR, CALL DIVERTING, SIGNAL WEAKNESS உள்ளிட்ட பிரச்னைகள் தவிர்க்கப்படும்.
வயர்லெஸ் இணைப்புகள் மூலம் செயல்படும் BLUETOOTH உள்ளிட்ட கருவிகளை அதிக வேகமாக செயல்பட வைக்க 5G சேவை உதவும்.
உயர்தர 4k வீடியோக்களை buffering இல்லாமல் play செய்ய முடியும்.
மேலும், 5G சேவையால் மிகவும் துல்லியமாக ஒருவரது இருப்பிடத்தை கண்காணிக்கலாம்.
5G சேவையின் பாதகங்கள்
அதிர்வெண் அலைகள் குறைந்த தூரம் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், 5G சேவையை அதிக தூரத்திற்கு வழங்குவது சவாலானதாக இருக்கும்.
5G சேவையை வழங்குவதற்கு அதிக அளவிலான செல்போன் கோபுரங்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்படும்.
உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளால் 5G சேவையை வழங்குவதற்கு அதிக செலவாகும் என்பதால், 5G சேவையை பெறுவதற்கு 4G சேவையை விட அதிக பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
அதேநேரத்தில், 5G சேவையை பயன்படுத்துவதால் செல்போன்களில் உள்ள பேட்டரிகளின் ஆயுட்காலம் குறையும் என கூறப்படுகிறது
கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் வேகம் அதிகமாக இருந்தாலும், பதிவேற்றம் செய்யும் வேகம் குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும் இது 4G சேவையை விட அதிகமாகவே இருக்கும்.








