இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு என்பது பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே இருந்து வருகிறது.
ஆண்களுக்கான கருத்தடை முறையான வாசக்டமி மிக மிக குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது. 2008 முதல் 2019 வரையிலான 11 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட 5.16 கோடி கருத்தடைகளில் வாசக்டமியின் சதவீதம் வெறும் 3 மட்டுமே என்கிறது ஒரு ஆய்வு. குடும்பக் கட்டுப்பாடு சுமையை முழுமையாக சுமக்கக் கூடிய கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க பெண்கள் கருத்தடை செய்து கொள்வது 37.9 சதவீதமும், மாத்திரைகள் எடுத்துக்கொள்வது 5.1 சதவீதமும், ஊசி போட்டுக்கொள்வது 0.6 சதவீதமும் உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS)-5ன் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களின் ஆணுறை பயன்பாடு 9.5 சதவீதமும், IUD பயன்பாடு 2.1 சதவீதமும் வாஸெக்டமி 0.3 சதவீதமும் உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS)-5ன் தரவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கான கருத்தடைகளில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பொது மருத்துவமனைகள் அல்லது அரசு நடத்தும் முகாம்களில் நடைபெறுவதாகவும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பிரசவத்திற்குப் பின் செய்யப்படுகிறது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய சுகாதார இயக்கத்தால் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கை, குடும்பக் கட்டுப்பாடு அல்லது கருத்தடைக்கான சுமையை பெண்களே தொடர்ந்து சுமப்பதாகவும், 2017-18 இல் நடந்த 14,73,418 கருத்தடைகளில், ஆண்கள் 6.8 சதவீதம் மட்டுமே செய்து கொண்டதாகவும், பெண்கள் 93.1 சதவீதம் கருத்தடை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கிறது.
இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசரநிலை காலத்தில் தொடங்கப்பட்ட குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தில், ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 62 லட்சம் ஆண்களுக்கு வாசக்டமி செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்தினர். இதையடுத்து, வாசக்டமி குறித்த தவறான தகவல்கள் பரவத் தொடங்கின. இது வாசக்டமி மீதான ஆர்வத்தை சிதைத்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களே கருத்தடை செய்து கொள்வதற்கான கட்டாயத்தை இது ஏற்படுத்தியது.
உண்மையில் வாஸெக்மி பாதுகாப்பானது. ஆனால், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் முயலாதது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
கருத்தடை விவகாரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் வாழும் பெண்களுக்கு தேர்வு சுதந்திரம் இல்லை. அதோடு, கருத்தடை குறித்த போதிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை. கருத்தடை செய்வதால் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினாலும் முடியாது என்பதும், அதன் உடல் ரீதியிலான பிற பாதிப்புகளும் அவர்களுக்கு முறையாக எடுத்துச் சொல்லப்படுவதுமில்லை.
பெண்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாததே இதற்குக் காரணம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஒட்டுமொத்த ஆண்களின் கல்வியறிவு 80.89 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 64.64 சதவீதமாகவும் இருந்தது.
மக்கள்தொகை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், கருத்தடை செய்து கொள்ள இருக்கும் பெண்களிடம் பெறப்பட வேண்டிய ஒப்புதல் முறையாக பெறப்படுவதில்லை என்றும், மூன்று பெண்களில் இருவரிடம் மட்டுமே ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆண்களுக்கான கருத்தடை குறித்தும், அறுவைசிகிச்சை அல்லாத பிற கருத்தடை முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகக் கூறும் வல்லுநர்கள், கருத்தடைகளில் ஆண் – பெண் இடையே நிலவும் பாலின வேறுபாடு களையப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது அவசியம் என்றாலும், இதற்கான சுமையை பெண்கள் மீது மட்டுமே திணிப்பது அநீதி என்பதை ஆண்கள் எப்போது உணருவார்கள் என்பதே மிக முக்கிய கேள்வி.






