திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் என்கிற சகாப்தம் பிளவு பட்டதால் உருவான அதிமுகவிலும் பிளவுகளும், விரிசல்களும் அவ்வப்போது எட்டிப்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. எஸ்.டி.எஸ் முதல் ஓபிஎஸ் வரையிலான காலத்தில் நிகழ்ந்த இந்த பிளவுகளின் பின்னணியை கொஞ்சம் அலசுவோம்.
எஸ்.டி.சோமசுந்தரம்….அதிமுக என்கிற கழகத்தில் முதல் முறையாக கலகம் செய்தவர் இவர்தான். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது, அவருடன் முதன்முதலாக இணைந்த திமுகவினரில் எஸ்.டி.சோமசுந்தரமும் ஒருவர். ஆனால் அவர்தான் அதிமுகவிலிருந்து முதல்முறையாக பிரிந்து சென்ற தலைவரும் ஆவார். 1947ல் திராவிடர் கழகத்தில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய எஸ்.டி.சோமசுந்திரம், பின்னர் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து , அண்ணா 1949ம் ஆண்டு திமுகவை தொடங்கியபோது அதில் இணைந்தார். 1972ம் ஆண்டு திமுகவில் பிளவு ஏற்பட்டு அதிமுக உருவானபோது அதிலும் ஐக்கியமானார். அண்ணா காலத்திலிருந்து திமுகவில் முக்கிய வகித்தவராக இருந்தாலும், தன்னை நம்பி அதிமுகவில் இணைந்தவர் என்பதால், எஸ்.டி.எஸ் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த மரியாதை வைத்து இருந்தார். அவரது இதயத்திற்கு நெருக்கமாக இருந்த எஸ்.டி.எஸ் பின்னர் எம்.ஜி.ஆர் அரசு மீதே ஊழல் புகார்கள் கூறும் அளவிற்கு எதிரியானார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அதிமுகவிலிருந்து பிரிந்து ”நமது கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான எஸ்.டி.சோமசுந்தரம், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சரானார். இப்படியாக அதிமுகவில் எஸ்.டி.எஸ் ஏற்படுத்திய கலகம் நாளடைவில் காணாமல் போனது.
அடுத்ததாக 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பெரும் பூகம்பமே ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மாளும், எம்.ஜி.ஆரால் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவும் அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு சொந்தம் கொண்டாடியதால் பெரும் பிரளயமே ஏற்பட்டது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்கிற இரண்டு பிரிவுகளாக இரட்டை இலை பிரிந்து நின்றது. அதிமுக எம்.எல்.ஏக்களில் 100 எம்.எல்.ஏக்களின் ஆதரவு ,இருந்ததால் சில நாட்கள் ஆட்சியில் இருந்தார் ஜானகி. எனினும் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்யை நிரூபிக்க முற்பட்டபோது அங்கு நிகழ்ந்த வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்கள் எதிரொலியாக ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இரட்டை இலை முடக்கப்பட்டது. ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும், ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் களம் இறங்கின. அதிமுக இரண்டு பட்டு நின்றதால் திமுக எளிதாக ஆட்சியை பிடித்தது. எனினும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றுபட்ட நிலையில், அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து 1991ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.
தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக உள்ள எஸ்.திருநாவுக்கரசர் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றபோது ஏற்படுத்திய சலசலப்புகளும், பரபரப்புகளும், அந்த கட்சியின் வரலாற்றை அலசும்போது நிச்சயம் நினைவில் வந்து செல்லும். 1977ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றபோது திருநாவுக்கரசருக்கு 27 வயதுதான். 1980ல், 30 வயதில் திருநாவுக்கரசரை அமைச்சராக்கி அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். 1987ம் ஆண்டுவரை அமைச்சராக பல்வேறு முக்கிய பொறுப்புகளை கட்சியிலும், ஆட்சியிலும் வகித்த திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர், ஜெயலலிதாவின் அரசியல் எழுச்சிக்கு துணை நின்றார். எனினும் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அப்போது தன்னைப்போல் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து 1991ம் ஆண்டு ”அண்ணா புரட்சி தலைவர் தமிழக முன்னேற்றக்கழகம்” என்கிற கட்சியை தொடங்கினார்.
ஆனால் 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசியலில் விஸ்வரூபம் எடுத்தார். அதிமுகவில் இனி ஆயுள் முழுவதும் அவர்தான் பொதுச் செயலாளர், வேறு யாரையும் அந்த பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கிற அளவிற்கு கட்சி முழுமையாக அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்நிலையில் 1996ம் ஆண்டு ”அண்ணா புரட்சி தலைவர் தமிழக முன்னேற்றக்கழகம்” அதிமுகவில் இணைக்கப்பட்டது. எனினும் அதிமுக தொண்டர்களை தம் பக்கம் இழுக்க முடியும் என்கிற நம்பிக்கை திருநாவுக்கரசர் மனதில் மீண்டும் துளிர்க்க சிறிது காலத்திலேயே மற்றொரு புதிய கட்சியான எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். பின்னர் தேசிய கட்சிகள் பக்கம் அவரது பார்வை விழுந்தது. பாஜகவில் எம்.ஜி.ஆர். அதிமுகவை இணைத்தார். பின்னர் பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவியை வகித்த திருநாவுக்கரசர், தற்போது காங்கிரசில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
அரசியலில் மட்டுமல்லாது சினிமாவிலும் எம்.ஜி.ஆருக்கு உற்றதுணையாக விளங்கி அவரது நம்பிக்கைக்கு உரியவராக வலம் வந்த ஆர்.எம்.வீரப்பன், அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவுடன் நெருக்கம் காட்டும் அளவிற்கு நிகழ்ந்த திருப்பங்களை தமிழ்க அரசியல் கண்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் அவரது மனைவி ஜானகியை அடுத்த தலைவராக ஏற்றுக்கொண்டு பயணித்தார் ஆர்.எம்.வீரப்பன். ஜானகியை அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக முன்னிறுத்தும் ஆர்.எம்.வீரப்பனின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இதனால் ஜெயலலிதாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவர் என்கிற அடிப்படையில் அவரை மீண்டும் அழைத்து கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து உணவுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார் ஜெயலலிதா. ஆனால் பாட்ஷா பட வடிவில் அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தது., ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் பனிப்போர்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில் ரஜினியை வைத்து பாட்ஷா படத்தை தயாரித்து, ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் இடையே மீண்டும் மோதல் ஏற்படுவதற்கு முதல் காரணமாக அமைந்தது. அடுத்ததாக பாட்ஷா பட விழாவில், அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக ரஜினி கூறியது. அதனை மறுத்து ஆர்.எம்.வீரப்பன் பேசாதது பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியது. ரஜினிகாந்த புதிய கட்சி தொடங்குவார் என்கிற பரபரப்பு நிலவி வந்த சூழலில், ஒருபுறம் ரஜினிகாந்துடன் நெருங்கிக்கொண்டு வந்த ஆர்.எம்.வீரப்பன் மறுபுறம் அதிமுகவிலிருந்து விலகிக்கொண்டு வந்தார். இதனால் அவர் உணவுத்துறையிலிருந்து கால்நடைத்துறைக்கு மாற்றப்பட்டார். எனினும் தொடர்ந்து ரஜினிகாந்துடன் ஆர்.எம்.வீரப்பன் நெருக்கம் காட்ட, அவர் அதிமுகவிலிருந்து கட்டம் கட்டப்பட்டார். அதே நேரம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையும் பொய்யானது. இதையடுத்து எம்.ஜி.ஆர் கழகத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன் திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் அங்கும் அவருக்கு கருணாநிதியின் இதயத்தில்தான் இடம் கிடைத்தது. தேர்தலில் நிற்க சீட் கிடைக்கவில்லை.
1987ம் ஆண்டுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு பிரளயம் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சியை அடுத்து சசிகலாதான் வழிநடத்துவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகதான் இருந்தது. அவருக்கு கட்சியில் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. 2016 டிசம்பர் 31ந்தேதி நடந்த அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயாலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த அவர் முதலமைச்சர் ஆவார் என சசிகலா ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தே நேரத்தில் எதிர்பாராத திருப்பமாக சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். அவருக்கு பிறகு துணைப்பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் கட்சியை வழி நடத்தினாலும், ஒற்றை தலைமை என்கிற அத்தியாயம் தேய்ந்துகொண்டே செல்வதை அவரால் தடுக்க முடியவில்லை. ஒருபுறம் தர்மயுத்தம் நடத்தி தனி அணியாக தனது பலத்தை ஓ.பன்னீர்செல்வம் நிரூபித்துக்கொண்டிருக்க மறுபுறம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாக அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்தார் இபிஎஸ். இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான பலப்பரிட்சையால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இப்படி இரட்டை தலைமை அதிமுகவில் உருவெடுத்ததால் கட்சியை விட்டு ஒதுங்கிய டிடிவி தினகரன் அமமுக என்கிற புதிய கட்சியை தொடங்கினார். அதே நேரம் பல்வேறு திருப்பங்களுக்கு பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்து அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மீட்டெடுக்கப்பட்டது. எனினும் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்கிறவிதமாக இருதரப்பிற்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டன.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இணைந்து கூட்டறிக்கைகள் வெளியிட்டு வந்த நிலையில் ஆட்சியை அதிமுக இழந்த பிறகு தனித் தனி அறிக்கைகள் வெளியாகத் தொடங்கின. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஒற்றை தலைமை என்கிற கோரிக்கை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. இந்த கோரிக்கை அதிமுகவில் மீண்டும் ஒரு பூகம்பத்தை வெடிக்கச் செய்தது. ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 23ந்தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக் குழுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே பொதுக்குழு உறுப்பினர்கள் கணடன கோஷங்களை எழுப்பும் அளவிற்கு உட்கட்சி பூசல் வீரியம் அடைந்தது. பொதுக் குழுவைவிட்டு பாதியிலியே வெளியேறினார் ஓபிஎஸ். தொடர்ந்து ஓபிஎஸ்,இபிஎஸ் தரப்பிடையே நடைபெற்ற பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பின்னர் இன்று பொதுக்குழு நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் ஒருபுறம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டிருக்க மறுபுறம், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது ஆதரவாளர்களுடன் உள்ளே நுழைந்தார். அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கிடையே கடும் மோதல் அரங்கேறியது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அலுவலக கதவை உடைத்துக்கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றச்சாட்டினர். இந்த கலவரங்கள் எதிரொலியாக அதிமுக தலைமை அலுவலகம் போலீசாரால் சீல் வைக்கப்படும் நிலைமை உருவானது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக ஜூலை 11 பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் தாம்தான் தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருகிறார் ஓ,.பன்னீர்செல்வம்.
இப்படி 50 ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு உட்கட்சி பூசல்களையும் பிளவுகளையும், எதிர்பாராத திருப்பங்களையும் கடந்து வந்துள்ள அதிமுகதான் தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட கட்சி என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.
எஸ்.இலட்சுமணன்








