மெல்லிடையாளே மெல்லப்போ…

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் மீசைக்கார பாரதி… கேட்க, கேட்க இனிமை தரும் இலக்கியச் செழுமை நிறைந்த திரையிசைப்பாடல்கள் குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்… மங்கையரது முகம், மலர்…

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் மீசைக்கார பாரதி… கேட்க, கேட்க இனிமை தரும் இலக்கியச் செழுமை நிறைந்த திரையிசைப்பாடல்கள் குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்…

மங்கையரது முகம், மலர் என்றும் அவளது சொக்கும் அழகு புன்னகைச்சோலை என்றும் மெய் மறக்கிறார்கள் கவிஞர்கள். சோலை மலரொளியோ கண்ணம்மா, உன் சுந்தர புன்னகைதான் என்கிறான் மீசைக்கார பாரதி. மலரினும் மென்மையானது பெண்மை என்றும் சிலாகிக்கிறார்கள்.

மலர்களுள் மிகவும் மென்மையானது அனிச்சமலர் என்பதை அறிவோம். அனிச்சப் பூவை காம்புடன் அவள் சூடியதால், ‘சுமை’ கூடத் தாங்க இயலாத மெல்லிய இடை என்பதை, “அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்” என்ற குறளில் நுண்ணிய இடை கொண்டவள் எனப் பாடினான் வள்ளுவன். பிறகென்ன வரிகளை கையாண்டு கவிஞர் வாலி தரும் பாடல் இது..

தலைவனை சூரியனாக, சந்திரனாக எண்ணிப்பாடும் கவிஞர்கள், பாட்டுடைத்தலைவியை மலராக, அவளின் அழகை கற்பனைக்கு எட்டாத வகையில் கவிபாடுகின்றனர். ராமபிரான், சீதை, இலட்சுமணனோடு காட்டுக்கு செல்வதை, பொய்யோ எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் என கம்பராமாயணத்தில் ஒரு காட்சியை கையாளுகிறான் கம்பன்… கம்பன் தந்த வரிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இல்லையென்று சொல்வது உந்தன் இடையல்லவா என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

கண்ணுக்குத் தெரியும் கானல்நீரை யாராலும் அள்ளிக் கொள்ள முடியாது. அதுபோல வானும் கடலும் சேரும் இடம் உள்ளது என யாராலும் சொல்ல இயலாது. காண்பதற்கு இருப்பது போல் தோற்றமளித்தாலும் அந்தப்பெண்ணின் தோற்றம் பொய்யுரைக்கிறது என பாடுகிறார் கவியரசு கண்ணதாசன்… பொட்டுவைத்த முகமோ பாடலில் இடம்பெற்ற தரையோடு வானம் விளையாடும் கோலம் என வரிகள் இடம்பெறுகின்றன.

இடையோ இல்லை இருந்தால் முல்லைக்கொடிபோல் மெல்ல வளையும் என பாடி எளிய தமிழ் வார்த்தைகளால் அன்னைத்தமிழுக்கு ஆபரணமிட்ட கவிதைப் பொற்கொல்லர்களை எழுந்து வரச்சொல்ல தோன்றுகிறதா?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.