சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர் குழு இன்று முடிவெடுக்க உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 நாட்களாக செயற்கை சுவாசம் இல்லாமல் சசிகலா இயல்பாக சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் சர்க்கரை அளவு சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள விக்டோரியா மருத்துவமனை, அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர்கள் குழு இன்று முடிவு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.







