உள்ளாட்சி தேர்தலுக்குப் பின் ம.தி.மு.க புது உத்வேகம் பெற்றுள்ளது: வைகோ

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மதிமுக புதிய உத்வேகம் பெற்றுள்ளதாக, கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வைகோவிற்கு, விமானநிலையத்தில் மதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். ஊரக…

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மதிமுக புதிய உத்வேகம் பெற்றுள்ளதாக, கட்சியின் பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வைகோவிற்கு, விமானநிலையத்தில் மதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மதிமுகவினர் அவரிடம் சான்றிதழ்களை வழங்கி ஆசி பெற்றனர். தொடர்ந்து வைகோ மற்றும் அவரது மகன் துரை வையாபுரி ஆகியோருக்கு வீரவாள் வழங்கி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. ஊரக உள்ளட்சி தேர்தலில் 17 ஒன்றிய கவுன்சிலர்கள் 2 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 87 ஊராட்சி மன்றங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

குருவிகுளம் ஒன்றியத்தில் 17 கவுன்சிலர் களில் 10 கவுன்சிலர்களை மதிமுக பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் மதிமுகவினருக்கு புத்துணர்ச்சியை, புதிய உத்வேகத்தை, எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனி 4 கால் பாய்ச்சலில் மதிமுக முன்னேறி செல்லும்.

மதிமுகவின் எதிர்கால திட்டங்களை வகுப்பதற்கான கூட்டம் வரும் 20- ஆம் தேதி நடக்கிறது. துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்குவது குறித்து அன்றுதான் தெரியவரும். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரின் கருத்துகளை கேட்டு முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.