மாதவன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் உருவாகியுள்ள “ராக்கெட்ரி” படமல்ல வரலாற்று காவியம் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை புகழாரம் சூட்டியுள்ளார்.
மங்கள்யான் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரோவின் கனவு திட்டங்களை சாத்தியமாக்கிய விகாஸ் ராக்கெட் என்ஜினை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகித்தவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். இந்தியா ராக்கெட்டுக்களில் திரவ என்ஜின்களை பயன்படுத்துவதற்கு அடித்தளமிட்ட அவரின் வாழ்க்கை வரலாற்று படம் ”ராக்கெட்ரி- நம்பி விளைவு”. இந்திய விண்வெளித்துறை முன்னேற்றத்திற்கு நம்பி நாராயணன் ஆற்றிய சாதனைகளை எடுத்துரைக்கும் இந்த படம், நாட்டின் ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அழுத்தமாக பேசுகிறது. கடந்த 1ந்தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ”ராக்கெட்ரி” திரைப்படம் சிறப்பாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்கனவே புகழாரம் சூட்டியுள்ளனர். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்யடி படம் ”ராக்கெட்ரி” என நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக் கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குனரும், சந்திரயான் 1, சந்திரயான் 2, மங்கள்யான் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவருமான மயில்சாமி அண்ணாத்துரை ”ராக்கெட்ரி” திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, இந்த படம் பார்த்த போது மீண்டும் இஸ்ரோவில் வாழ்ந்தது போன்ற உணர்வு தமக்கு ஏற்பட்டுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
இது படம் அல்ல வரலாற்று காவியம் என தனது மகிழ்ச்சியை மயில்சாமி அண்ணாத்துரை வெளிப்படுத்தியுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நிகழ்ந்தது போன்ற அநீதி இனி யாருக்கும் நிகழக்கூடாது என்கிற மாதவனின் மிஸன்தான் இந்த படம் என்று பாராட்டியுள்ள மயில்சாமி அண்ணாதுரை, மாதவனின் எண்ணங்கள் மக்களிடையே சென்றடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். ராக்கெட்ரி அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் எனக் கூறியுள்ள மயில்சாமி அண்ணாதுரை, இந்த படத்தை கொடுத்தற்காக மாதவனுக்கு தமது சல்யூட் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.








