சென்னை டென்னிஸ் களத்தில் அசத்தும் தமிழ் பெண் மாயா!

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்து வீராங்கனை வெரோனிகா ஃபால்கோவ்ஸ்காவை வீழ்த்தி 17 வயது இந்திய வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் போலந்து வீராங்கனை வெரோனிகா ஃபால்கோவ்ஸ்காவை நேர் செட்களில் வீழ்த்திய மாயா, காலிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் WTA டூர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகளின் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சானியா மிர்சாவுக்குப் பிறகு சாதனை!

கடைசியாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா WTA டூர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார். அதற்கு முன்பு, 2005-ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீராங்கனை ஷிகா உபெராயும் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். தற்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த 17 வயது மாயா ராஜேஸ்வரன் ரேவதி, இந்தப் பட்டியலில் இணைந்து இந்திய டென்னிஸ் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பாராட்டுகளைவிட ஆட்டத்திற்கே முக்கியத்துவம்!

தனது சாதனை குறித்துப் பேசிய மாயா, ஒரு வீராங்கனையின் பயணத்தில் அங்கீகாரமும் பாராட்டுகளும் முக்கியமானவை என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவில் மகளிர் டென்னிஸுக்குப் புதிய அடையாளங்களும் முன்மாதிரிகளும் தேவைப்படும் நிலையில், தனக்குக் கிடைக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். அதேநேரத்தில், இறுதியில் அனைத்தும் டென்னிஸ் ஆட்டத்தைப் பொறுத்தே அமையும் என்றும், சிறப்பாக விளையாடி, தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேறுவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் தொழில்முறைப் பட்டத்தை வென்று அசத்தல்!

இந்த ஆண்டில் தொழில்முறை டென்னிஸ் தொடரில் ஒரு பட்டத்தையாவது வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருந்த மாயா, நைஜீரியாவின் லாகோஸில் நடைபெற்ற ITF தொடரில் பட்டம் வென்று தனது இலக்கை எட்டியுள்ளார். ஜூனியர் டென்னிஸ் போட்டிகளுடன் சர்வதேச தொழில்முறைப் போட்டிகளிலும் பங்கேற்று வரும் அவர், இந்த ஆண்டைச் சிறப்பாக நிறைவு செய்வதற்காக முடிந்தவரை அதிகப் போட்டிகளில் விளையாட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தரவரிசை மற்றும் சாதனைகள் குறித்து அதிக அழுத்தம் எடுத்துக்கொள்ளாமல், தனது ஆட்டத்தை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தோல்விகளும் கற்றுக்கொள்ளும் அனுபவங்களே!

சென்னையின் அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த வானிலை சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்ட மாயா, இரு வீராங்கனைகளுக்கும் ஒரே மாதிரியான சூழல்தான் என்பதால், அதிக நேரம் களத்தில் தாக்குப்பிடித்துப் போராடுவதே வெற்றியைத் தீர்மானிக்கும் என்றார். ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இந்த ஆண்டு ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றைத் தாண்ட முடியவில்லை என்றாலும், அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். தோல்விகள் குறித்துப் பேசிய அவர், போட்டிகளில் விளையாடுவது, தோல்வியடைவது, அதிலிருந்து கற்றுக்கொள்வது எனத் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும், கடந்த தோல்விகளை நினைத்து வருந்துவதில் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

காலிறுதிப்போட்டி!

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, அமெரிக்காவின் ராபின் மாண்ட்கோமெரியை எதிர்கொள்கிறார். காலிறுதி ஆட்டம் நாளை (நவம்பர் 6) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மாயா அரையிறுதிக்கு முன்னேறுவார்! 17 வயதிலேயே சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது திறமையை நிரூபித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் ரேவதி, இந்திய மகளிர் டென்னிஸின் நம்பிக்கைக்குரிய இளம் வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். அவரது அடுத்தடுத்த ஆட்டங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.