உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும், மே தினம் கொண்டாட்டம், இந்தியாவில் உருவாகி நூறாண்டுகள் ஆகிறது. இந்தியாவில் சென்னை மெரினாவில் சிங்காரவேலரால் முன்னெடுக்கப்பட்ட மே தின வரலாறு குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…
இயந்திரங்களின் வருகையால் தொழிற்புரட்சியால் உற்பத்தி பெருகினாலும், ஆலைகளில் தொழிலாளர்கள் 18 மணி நேரம் வரை உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். சரியான உறக்கம் இல்லாமல், ஓய்வறியா உழைப்பால் தொழிலாளர்கள் நோயுற்றனர். அவர்களின் உடலிலிருந்து வியர்வையும், செங்குருதியும் அதிகமாகவே வெளியேறின என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
8 மணி நேரம் பணி நேரம் வேண்டி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,அமெரிக்கா,பிரான்ஸ் ஆகிய நாடுகளீல் தொழிலாளர்களின் எழுச்சி புதிய உத்வேகம் அடைந்தது. அமெரிக்காவின் , சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும், ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களை மேலும் வலுவாக்கியது.
1889ம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி ,பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ,சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில், 8 மணி நேர வேலை வேண்டும் என தீர்மானம் இயற்றி, 1890ம் ஆண்டு மே 1 முதல் தொழிலாளர் நாள் கொண்டாட்டம் ஆரம்பமானது.
1905ம் ஆண்டு லெனின் தலைமையில் நடந்த ரஷ்ய புரட்சி உலகெங்கும் உள்ள தொழிலாளர்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது. எப்போதும், இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு, மே தின உருவாக்கத்திலும் வழிகாட்டியது. 1908ம் ஆண்டு தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டத்தை வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் வெற்றிப்பாதைக்கு திருப்பினர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் கம்யூனிச சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்த தலைவர்களான சிங்காரவேலர், திருவிக, பிற்காலத்தில் நீதிக்கட்சியின் நிறுவனரான நடேச முதலியார், சர்க்கரைச் செட்டியார்,சுப்ரமணிய ஐயர்,கிருஷ்ணசாமி சர்மா உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவளித்தனர்.
1918ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று, சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ராஸ் லேபர் யூனியன் ,இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பாக உருமாறியது. ஐரோப்பா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ரஷ்யாவில் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விடியல் உதயமானது. ஆனால் இந்தியாவில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கதையாகவே இருந்தது.
இந்நிலையில், மெட்ராஸ் அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள், அடிசன் அச்சக ஊழியர்கள் ஆகியோரின் வேலை நிறுத்த போராட்டம் சிங்காரவேலர் தலைமையில் நடந்தது. அடுத்ததாக கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், சுவாமி தீனாநாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ், எஸ்.என்.ஹால்டர், டாக்டர் டி.டி.சத்யா, ஜே.எம்.சென் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட AITUC என்ற தொழிலாளர்களுக்கான குழுவை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சி.
1923ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி, சுவாமி தீனந்த்துக்கு அனுப்பிய தந்தியில் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வருவதை போல், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார் சிங்கார வேலர்.
1923ம் ஆண்டு, மே 1ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகில் மெரினா கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் நடைபெற்ற விழாவில், தொழிலாளர்கள், விவசாயிகள் திரளாக கூடினர்., புதிதாக தொடங்கப்பட்ட லேபர் கிசான் கட்சி காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாகவே செயல்படும் என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, திருவான்மியூர் கூட்டத்தில், லேபர் கிசான் கட்சியின் செயலாளராக தேர்வான எம்.பி.எஸ்.வேலாயுதம், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது. இதை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் செங்கொடி ஏற்றப்பட்ட முதல் மே தின கொண்டாட்டமாக இது அமைந்தது. பிறகு பம்பாய், பஞ்சாப், வங்காளம் என நாடு முழுவதும் பரவியது.
“உரிமைகளை வென்றெடுக்க, சுரண்டல்களிலிருந்து விடுதலை பெற உலகத் தொழிலாளர்களிடையே ஒற்றுமை தேவை’’ என வலியுறுத்தி பேசினார் சிங்காரவேலர்
((1957-ல் கேரளாவில் ஆட்சியமைத்த கம்யூனிஸ்ட் கட்சி மே தினத்தை கொண்டாடியது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் , 1959 ஆம் ஆண்டு ,சென்னை கடற்கரை சாலையில் எழிலகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் எதிரே மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது. 1967 ம் ஆண்டு அண்ணா வின் ஆட்சிக்காலத்தில் ,தமிழ்நாடு அரசு சார்பில் மே தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது. 1990 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் வி.பி.சிங் மே தினத்திற்கு பொது விடுமுறையை அறிவித்தார் ))
உலகம் முழுவதும் மேம்பட்ட ஜனநாயக அரசுகள் ஆட்சியில் இருந்தாலும், முன்னேப்போதும் இல்லாத வகையில் முதலாளித்துவம், உழைக்கும் வர்க்கத்தை கசக்கி பிழியும் இன்றைய காலகட்டத்தில் மே தினம் கொண்டாட்டம் குறித்த வரலாற்றை, அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்கிறார்கள் தொழிற்சங்க தலைவர்கள்.
-ரா.தங்கபாண்டியன்









