குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12-ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது
பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என பரவலாக பேசப்பட்டாலும் உலகம் முழுவதும் ஏராளாமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. பொறியியல் படிப்பில் சேருவதற்கு 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் படித்திருக்க வேண்டும். தற்போது 2022-2023-ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12-ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து AICTE வெளியிட்டுள்ள அறிவிப்பில், கணினி அறிவியல், மற்றும் மின் & மின்னணு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 12-ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. 3-ல் 1 பங்கு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை எனவும் 12-ம் வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களும் வரும் காலத்தில் பொறியியல் படிப்புகளில் சேரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், 12-ம் வகுப்பில் கணிதம் பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு, முதலிரண்டு செமஸ்டர்களில் கணிதம்,இயற்பியல் ,வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை Bridge course முறையில் கற்பிக்கப்படும் என AICTE விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக வேளாண்மை பொறியியல், கட்டடக்கலை, உயிர் தொழில்நுட்பவியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை என குறிப்பிட்டுள்ளது.
நடப்பு 2021-2022-ம் கல்வியாண்டுக்கு AICTE வெளியிட்ட விதிமுறைகளில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை 12-ம் வகுப்பில் விருப்பப்பாடமாக மட்டும் படித்து இருந்தால் அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என தெரிவித்திருந்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட பொறியியில் பாடப்பிரிவுகளில் மட்டும் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை பயிலாத மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.