குரு, சிஷ்யனின் மாஸ்டர் பிளான்; பூகம்பம் வெடிக்க காத்திருக்கும் அகமதாபாத் மைதானம் -ஐபிஎல் 2023 மாபெரும் இறுதிப்போட்டி..!!

பூகம்பம் வெடிக்க காத்திருக்கும் அகமதாபாத் மைதானத்தில் மகுடம் சூடப் போவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா..? அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணியா..? இரண்டாயிரத்து இருபத்தி இரண்டு: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின்…

பூகம்பம் வெடிக்க காத்திருக்கும் அகமதாபாத் மைதானத்தில் மகுடம் சூடப் போவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா..? அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணியா..?

இரண்டாயிரத்து இருபத்தி இரண்டு:

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் புதிய அணியாக அறிமுகமானது குஜராத் டைட்டன்ஸ். 2021 இல் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பிரபல ஐபிஎல் வீரர்களை திட்டமிட்டப்படி வாங்கி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தடம் பதித்தது மட்டுமல்லாமல் அறிமுகமான முதல் ஆண்டிலேயே சாம்பியன் பட்டம் வென்று, அனைவரது கவனத்தையும் தன் வசப்படுதியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அதே சமயம் 2021 ஆம் ஆண்டில் அதிரடி காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டு ஒரு மோசமான சூழலில் தொடரை முடித்திருந்தாலும், உயிரற்ற உடலாக இருந்த சென்னை அணிக்கு, கேப்டன் மகேந்திர சிங் தோனி உயிரூட்டிய வார்த்தைகள், இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய உத்வேகத்தை அளித்தன.

இவ்விரு அணிகளும் எண்ணிலடங்கா ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் மத்தியில் கோப்பையுடன் சந்தித்த இந்த வருடத்தின் முதல் போட்டியைப் போலவே கடைசிப் போட்டியிலும்  இவர்கள் இருவரும் பங்கேற்பார்கள் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் களம் கண்ட முதல் போட்டியே, சென்னை அணிக்கு சாதமாக அமையவில்லை.

முதல் போட்டியிலேயே சேஸிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோல்வி முகமே வாய்த்தது. வெற்றி கண்ட குஜராத் அணிக்கோ, கடந்த தொடரின் இறுதிப் போட்டியில்  எப்படி வெற்றியோடு முடித்தார்களோ அதே வெற்றியோடு இந்த சீசனை தொடங்கியது குஜராத் அணி.

இரண்டாவது போட்டியை லக்னோவுடன் விளையாடிய மஞ்சள் படை  12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் நட்சத்திர பார்ட்னர்ஷிப் எங்கள் அணியில் தான் இருக்கிறார்கள் என மற்ற அணிகளுக்கு அடித்துச் சொல்லும் அளவுக்கு இருவரின் பார்ட்னர்ஷிப்பும் அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் எடுத்துச் சென்றதுதான் வெற்றிக்கு வழிவகுத்தது.

இதனையடுத்து இரண்டாவது போட்டியில் களம் கண்ட குஜராத் அணிக்கோ, டெல்லி கேபிடல்ஸ் அணியின் மைனஸை முன்னதாகவே ஏதோ புத்தகத்தில் படித்திருந்தது போல அவர்களது சொந்த மண்ணிலேயே சேஸ் செய்து அசால்ட்டான இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆடிய சூதானமான ஆட்டம், குஜராத் அணியிலிருந்து இந்த தொடரில் ஒரு நம்பிக்கையான பேட்டரை அறிமுகம் செய்து வைத்தது.

அதே சமயம் தனது மூன்றாவது போட்டியை மும்பை மண்ணில், El-Clasico மோதலாக சந்தித்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ரவீந்திர ஜடேஜாவின் ரகசிய ஸ்பெல் உதவியதை அடுத்து, மும்பை மண்ணும் மஞ்சளாக மாறியது. முன்னாள் மும்பை புராடக்ட்டான அஜிங்கியா ரஹானேவின் 2.0 ஆட்டம், மும்பை இந்தியன்ஸ் அணியை முடக்கிப்போட்டு, வான்கடே மைதானத்தில் மங்களகரமான வெற்றியை பதிவு செய்ய உதவியது.

ஆனால் குஜராத் அணிக்கோ அதன் மூன்றாவது போட்டி ஒரு சர்ப்ரைஸ் தோல்வியை கொடுத்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரின் உதவியால் 200 ரன்களுக்கு மேல் டார்கெட் கொடுத்த பாண்டியா அண்ட் கோவுக்கு, சேசிங்கிள் பிளீச்சிங் அடித்தார் ரிங்கு சிங்.

கொல்கத்தா அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ”வாள் தூக்கி வந்து நின்னான் பாரு” என்பது போல யஷ் தயாளின் பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங், அகமதாபாத் பவுண்டரிகளை அடுத்தடுத்து 5 சிக்சர்கள் மூலம் பதம் பார்க்க, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுக் கொடுத்து அந்த பெயருக்கும் சொந்தமானார்.

அதே போல சொந்த மண்ணில் சைலண்ட் கில்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை களம் கண்ட கேப்டன் கூல் அண்ட் கோ 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆனால் அந்த தோல்வியே சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை குழப்ப காரணமாக அமையும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.

ஆனால் பிளே ஆஃப் ரேசில முதலிடம் பிடிக்க வேண்டும் என சுதாரித்துக்கொண்ட  டைட்டன்ஸ், சுப்மன் கில் எனும் வந்தே பாரத் ரயிலை அடுத்தடுத்த போட்டிகளில் அசுர வேகத்தில் ஓட வைத்ததன் மூலம் பஞ்சாப், லக்னோ, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு என ஒவ்வொரு அணியையும் ஆதிக்கத்துடன் வெற்றிக் கண்டு நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

மற்றொரு புறம் பிளே ஆப் வாய்ப்புக்காக யுத்தம் செய்த மஞ்சள் படை பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகளை வெற்றி கண்டு இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், ரன் ரேட் அடிப்படையில் இரண்டாமிடம் பிடித்து குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த தொடரிலேயே குறைந்த தோல்விகளை மட்டுமே பதிவு செய்துள்ள குஜராத் அணிக்கு சுப்மன் கில்லின் அசாத்திய பேட்டிங் வரப்பிரசாதமான ஒன்றாக அமைந்தது. ஹர்திக் பாண்டியாவின் Swagகான கேப்டன்சி, முகமது சமி, ரஷித் கான் மற்றும் சர்ப்ரைஸ் பவுளர் மோகித் சர்மாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகள் எதிரணியினரை மின்னல் தாக்கியது போல உணரச் செய்தது.

தொடர்ச்சியாக  சதம் விளாசியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அடுத்தடுத்து சதங்கள் விளாசிய 4 ஆவது பேட்டர் என்ற பெருமையை பெற்றது மட்டுமல்லாமல், இந்த தொடரிலேயே 3 சதங்கள் மற்றும் ஆரஞ்சு கேப்புக்கு சொந்தக்காரராகவும் உறுவெடுத்துள்ளார் சுப்மன் கில்.

சென்னை அணிக்கோ இந்த தொடர் முழுவதுமாக ஆர் ஆர் ஆர் படத்தின் நாயகர்கள் ராம் சரன், ஜூனியர் என் டி ஆர் ஜோடி போல பார்ட்னர்ஷிப்பில் கை கோர்த்த ருதுராஜ், டெவன் காண்வே ஜோடி சென்னை அணி எதிரனியினருக்கு நல்ல டார்கெட்டை பதிவு செய்ய உதவியது. வாள் வீரன் ரவீந்திர ஜடேஜா, 2.0 சிட்டியான அஜிங்கியா ரஹானே, பவர் ஹிட்டிங் சூறாவளி ஷிவம் தூபே என பவர்பேக்கிங் அணியாக குவாலிஃபயருக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இறுதிப்போட்டி ரேசில் சூப்பர் கிங்ஸ், டைட்டன்ஸ் :

12 ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணிக்கு குவாலிஃபயர் 1 இல் கிடைத்த அட்வாண்டேஜ், அந்த போட்டி சென்னையில் நடக்க இருந்தது தான். அதாவது குவாலிபயர் 1 போட்டிக்காக சென்னை விஜயம் செய்த குஜராத் அணியோ, முதல் முறையாக சென்னை மண்ணை சந்தித்தது.

தோனியின் கோட்டையான சென்னை மண்ணில், பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸுக்கு, வெற்றிக்கான நோட்ஸ் எடுக்கவே இரவு பகல் ஆகி விட்டது. சென்னை மக்களின் ஆரவாத்துடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், பந்துவீச்சில் தான் சென்னைக்கு வந்த பணியை செவ்வனே செய்தாலும் இரண்டாவது பேட்டிங் செய்யும் போது, சென்னையின் ஸ்லோ விக்கெட் எத்தகைய சவாலானதாக இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.

20 ஓவர்களில் 172 ரன்களுக்கு சென்னையை கட்டுப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ், 173 ரன்களை எளிய இலக்காக எண்ணி இரண்டாவது பேட்டிங்கில் கால் தடம் பதித்த முதல் கணமே, பவர்பிளே ஓவர்களுக்குள் விரித்திமான் சாகா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை இழந்ததோடு, 12.5 ஓவர்களுக்குள் தசுன் ஷனாகா டேவிட் மில்லர் விக்கெட்டுகளை பறிகொடுக்க கடைசி நம்பிக்கையாக இருந்த சுப்மன் கில்லின் விக்கெட்டும் சென்னை பந்துவீச்சுக்கு இரையானது. அதன் பின் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்த குஜராத் வீரர்கள் 157 ரன்களுக்கே சுருண்டு 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர்.

வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேற, குவாலிபயர் 2 இல் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேர் முடியும் என்ற இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டது குஜராத் டைட்டன்ஸ் அணி.

குவாலிஃபயர் 2 இல் குஜராத்தின் ருத்ர தாண்டவம்

குவாலிபயர் 1 இல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, குவாலிபயர் 2 இல் மும்பை அல்லது லக்னோ அணிகளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தது குஜராத் டைட்டன்ஸ்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், எளிமையான வெற்றி கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் மண்ணில், குஜராத் அணியை குவாலிபயர் 2 இல் களம் காண தயாரானது.

இந்த தொடர் முழுவதுமாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அந்த அணி விளையாடிய அனைத்து போட்டிகளுமே, ராஜ தந்திரத்துடன் அமைந்தன.

ஹைக் ஸ்கோரிங் டார்கெட்டுகளை அவ்வபோது கொடுத்து முகமது சமி, ரஷித் கான் பந்துவீச்சால் எதிரணியினரை கவுண்டர் அட்டாக் செய்தும், அவ்வப்போது மோகித் சர்மா மற்றும் நூர் அகமதுவின் சர்ப்ரைஸ் ஃபார்மால் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் நாலாப்பக்க பவுண்டரி லைன்களை மைல் கணக்கில் தூரமாக்கியதோடு மட்டுமல்லாமல் விக்கெட்டுகளை வாரி குவித்தனர்.

அதே தந்திரத்தை மீண்டும் ஒரு முறை நிதர்சனப்படுத்தும் முயற்சியாய் முதலில் களமிறக்கப்பட்ட சுப்மன் கில்லின் ஒன் மேன் ஷோ டேக்ட்டிக்ஸ், மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்க்ளை கதற செய்தது. வெறும் 60 பந்துகளிலேயே 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என விளாசிய சுப்மன் கில், இந்த ஐபிஎல் தொடரின் மூன்றாவது சதத்தை பதிவு செய்ததுடன், 129 ரன்கள் குவித்து இந்த தொடரின் அதிக ரன்கள் அடித்த பேட்டர் என்ற பெருமையை பெற செய்தது.

சாய் சுதர்சன் ஒத்துழைப்பால் 20 ஓவர்களில் 233 ரன்கள் குவித்து, இந்த தொடரின் இரண்டாவது அதிகபட்ச டீம் ஸ்கோரை பதிவு செய்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது குஜராத் அணி.

233 ரன்கள் இலக்கை அண்ணார்ந்து பார்த்தவாறே அகமதாபாத்தின் விக்கெட்டுக்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, 75000 பேர் கூடியிருந்த அந்த மைதானத்தில் யாருமே எதிர்பாராத்த ஒரு இன்னிங்ஸை தொடங்க செய்தது.

நேஹால் வதேரா, கேப்டன் ரோகித் சர்மாவின் விக்கெட் இழப்பிற்கு பின் குஜராத் பக்கமாக வீசிய காற்று, கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவின் குயிக் ஸ்கோரிங் அதிரடியால்  திசைமாறி போனது. அத்தகைய பெரிய களத்தில் 5 முறை கோப்பைகள் வென்ற அனுபவத்தை ஆன்கர் இன்னிங்ஸாக பிரித்து மேய்ந்த சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன் ஜோடி குஜராத் அணிக்கு பயம் காட்ட இக்கட்டான சூழலில் இருந்த குஜராத்துக்கு தேவைப்பட்டதோ ஒரு சிறிய Breakthrough தான்.

அதனை டேக் ஆன் செய்ய ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட மோகித் சர்மா, தக்க சமயத்தில் மும்பை பக்கம் வீசிய காற்றை குஜராத் பக்கம் திருப்பி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பைனல்ஸ் வாய்ப்பை வெறும் வாய்ப்பாக மட்டுமே மாற்றி, 5 விக்கெட்டுகளை தன் வசப்படுத்தினார். அடுத்தடுத்து நிலை தடுமாறிய மும்பை அணி ஒரு கட்டத்தில் 18.2 ஓவர்களிலேயே 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவிய நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்.

இறுதிப் போட்டியில் குஜராத், சென்னை அணிகள்

இந்த ஆண்டின் முதல் போட்டி நடைபெற்ற போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் இந்த போட்டியே முதலுமாகவும், முடிவாகவும் இருக்க கூடும் என்று. ஆம் இடைப்பட்ட போராட்டங்களை தவிர்த்து, இறுதிப் போட்டியில் அதே சென்னை, குஜராத் அணிகள் மோதுவது இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இது என்று ஒரு தரப்பில் அவரது கிரிக்கெட் வரலாற்று பக்கங்களை புத்தகங்களாக மாற்றி பிரிண்ட் செய்துகொண்டிருக்கும் அதே வேலையில், தனது கூலான கேப்டன்சியின் யுக்திகளை பயன்படுத்தி சென்னை அணியை 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைய வைத்ததோடு, அடுத்த சீசனிலும் தான் தொடர விரும்புகிறேன் என்ற ஹிண்டையும் வைத்திருக்கிறார் தோனி.

எனவே இந்த ஸ்பெஷலான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு இருக்கும் ஹைப்பை கொஞ்சம் கூட தலையில் ஏற்றிக் கொள்ளாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் புதிதாக எதுவும் முயற்சி செய்யாமல் தாங்கள் இதுவரை கற்றுத் தேர்ந்ததை செய்தால் மட்டுமே போதுமானது.

ஆனால் குஜராத் அணியினரின் இரவு நேர கனவு என்பது சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனியின் சூப்பர் பவர் சிந்தனைகளை எப்படி களவாடுவது என்பதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எப்படி வெற்றி பெறுவது என்பதுமாக தான் இருக்கக்கூடும்.

எது எப்படியோ, இந்த ஐபிஎல் தொடரில் வெற்றி பெறும் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக ஹேட்டர்களே இல்லாத அணி என்ற பெருமையை பெற்றிருப்பது, நாளைய போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க பார்வையாளர்களை கண்டெடுக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.