ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட தம் இறுதி மூச்சுவரை போராடியவர்கள் மருது சகோதரர்கள். இவ்விருவரையும் ஆங்கிலேயர்கள் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் தூக்*லிட்டனர். நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இவர்களின் வீரமும் தியாகமும் தமிழர்களின் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. இன்று அவர்களின் 225 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளில், அவர்களின் நினைவைப் போற்றி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தங்களது மரியாதையை செலுத்தியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்! புறநானூற்றுத் தமிழர் வீரத்துக்கு இலக்கணமாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போர் புரிந்த சிவகங்கைச் சீமையின் சீற்றமிகு காளைகள் பெரிய மருது அவர்களும் சின்ன மருது அவர்களும்.
இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே ‘ஜம்புத்தீவு பிரகடனம்’ வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள். உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த அந்தப் போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய விடுதலைப்போரில் ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்க மாபெரும் போர் புரிந்த வீர மருதிருவர் நினைவு நாள் இன்று. மக்களிடம் இருந்து உருவான மன்னர்கள் என்று போற்றப்பட்ட மருதுபாண்டியர்கள், அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து உருவாக்கிய சமத்துவப் போர்ப்படை, ஆங்கிலேயர்களை அலறச்செய்தது.
சிவகங்கைச் சீமையில் இருந்து புறப்பட்டு, இந்திய விடுதலைக்காக களம்கண்ட தென்னிந்திய மன்னர்களை ஒருங்கிணைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள். ’ஜம்புத்தீவு’ பிரகடனத்தை வெளியிட்டு நாடெங்கும் விடுதலை உணர்வை தட்டியெழுப்பிய மாமன்னர் மருதுபாண்டியர்களின் தியாகமும், வீரமும் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க அவர்கள் புகழ்!” என அவர் தெரிவித்துள்ளார்.




