திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டின் முன்பு உயிரிழப்புக்கு முயன்ற இளம்
பெண்ணிற்கு விருத்தாச்சலம் போலீஸார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆலடி ரோடு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராயப்பன் மகள் ஆரோக்கிய ஷாலினி (21). இவரும் விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அருள்ராஜ் (27) என்பவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அருள்ராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். அவர் வரும் வரை ஆரோக்கிய ஷாலினி காத்திருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருள்ராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அவரிடம் சென்று ஆரோக்கிய ஷாலினி தன்னைத் திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். ஆனால் அவர் அவரைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆரோக்கியசாலினி தொரவளூரில் உள்ள அருள்ராஜ் வீட்டிற்குச் சென்று மீண்டும் மன்றாடி கேட்டுள்ளார். ஆனால், அப்போதும் அவர் அவரை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால், மனமுடைந்த ஆரோக்கிய ஷாலினி உயிரிழப்புக்கு முயன்று கையில் வைத்திருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் காதலித்து வந்ததும், அருள்ராஜ் திருமணம் செய்ய மறுத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஆரோக்கிய ஷாலினிக்கும் அருள்ராஜிக்கும் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வண்ண முத்து மாரியம்மன் கோவிலில் போலீஸார் மற்றும் இருவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
-ம.பவித்ரா







