விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் 4வது பாடலான “கருப்பண சாமி” தற்போது வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மார்க் ஆண்டனி. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 1.6 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.
இதுதொடர்பாக நடிகர் விஷால் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கிலும் செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியிலும் வெளியாகும் திரைப்படத்தை நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன் கூறினார்.
டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் 4வது பாடலான “கருப்பண சாமி “ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பின்னணிப் பாடகர் அனந்து பாடியுள்ளார். மேலும் இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் மதுக்கூர் ரவி எழுதியுள்ளார்.







