ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், நீதி வேண்டும் என்றும் இந்த பிரச்னையில் முதலமைச்சர் தலையிட வேண்டும் எனவும் குழந்தையின் தாய் அஜிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டில் இருந்த செவிலியரின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார். இவ்விவகாரம் குறித்து விசாரித்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிஷா பேசியதாவது:
விசாரணை முழுமையாக நடைபெறவில்லை, மருத்துவர்களிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றுள்ளது. ஆனால் குழந்தை சிகிச்சை பெற்ற போது அருகாமை படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. குழந்தைக்கு நடந்த அனைத்திற்கும் அருகாமை படுக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உறவினர்களே சாட்சி.
மருத்துவ அறிக்கையில் குழந்தைக்கு தீவிர எடைக்குறைவு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பிறந்ததிலிருந்து குழந்தையின் எடை அதிகரித்தே வந்தது. ஆதலால் இது எப்படி தீவிர எடைக்குறைவு என்று கூறமுடியும்.
குழந்தையின் கையில் பிரச்னை ஏற்பட்டதை எடுத்துரைத்த நாள் முதல் இருதய நோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அனைத்து பரிசோதனைகளிலும் குழந்தையின் இருதயம் சீராக இயங்குகிறது. குழந்தை ஆரோக்யமாக இருக்கிறது என்றே முடிவு வந்துள்ளது. ஆனால் மருத்துவ விசாரணை அறிக்கையில் மட்டும் குழந்தைக்கு இருதய கோளாறு இருப்பதாக பொய்யாக கூறப்பட்டுள்ளது.
29-ஆம் தேதி குழந்தையின் கை நிறம் மாறுவதாக நான் செவிலியரிடம் முறையிட்டேன். மருத்துவர் இல்லாததாலேயே செவிலியரிடம் முறையிடும் நிலை ஏற்பட்டது. அரசு பொதுமக்களுக்கு துணையாக உள்ளதா அல்லது எங்களை வைத்து மருத்துவம் கற்றுக்கொள்ளும் மருத்துவர்களுக்கு துணையாக உள்ளதா? கடந்த ஒன்றாம் தேதி 2 மணி நேரத்திற்குள் குழந்தையின் கையில் அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். ஆனால் 29-ஆம் தேதியே பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நான் ஆரம்பத்திலிருந்து கூறி வந்ததை மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்கள் மறுத்து வந்தனர். ஆனால் 29-ஆம் தேதியே பாதித்தது என்று நான் கூறியதை தான் தற்போது மருத்துவ அறிக்கையில் கூறியுள்ளனர். 29-ஆம் தேதி உரிய சிகிச்சை அளித்திருந்தால் என் குழந்தையின் கை பறி போயிருக்காது.
அரசு ஊழியர்கள் செய்யும் தவறுகளுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் வரை இந்த தவறுகளுக்கு முடிவு கட்ட முடியாது. நேற்று வரை நான் பேசியது பொய் எனக் கூறியவர்கள், இன்று நான் பேசிய அனைத்தும் சரி என அறிக்கை கொடுத்துள்ளனர். குழந்தையில் தலையில் நீர் வடிந்தது குறித்து டெஸ்ட் ரிப்போட் வந்தது குறித்து முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறுகின்றனர். மருத்துவர் தவறு செய்ததிலிருந்து தப்ப மாற்றிமாற்றி பேசுகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும்.
இவ்வாறு குழந்தையின் தாய் அஜிஷா கூறினார்.







