கடந்த சில வருடங்களில் வெளியான தமிழ் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் பார்வையில் இருந்தும் அரசியல் பேச ஆரம்பித்துள்ளன. என்றாலும், மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலங்கள் குறித்த திரைப்படங்கள் எதுவும் இதுவரை வந்ததில்லை. அப்படியாக வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘விட்னஸ்’ (Witness)
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் வசிக்கும் இந்திராணி (ரோகிணி), சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். கல்லூரி படிக்கும் அவரது மகன் பார்த்திபனை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கழிவுநீர் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி சுத்தம் செய்ய சொல்கிறார்கள். அங்கு அவர் இறந்துவிடுகிறார். இனி ஒரு மரணம் இதுபோல நடக்கக்கூடாது என தனது மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு தாய் நடத்தும் போராட்டம், அதற்காக அவருக்கு நேரும் இன்னல்கள், இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒருவரியில் சொல்லிவிட்டு சென்றாலும் படத்தின் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அரசு இயந்திரத்தின் அலட்சியத்தை, அதிகார வர்க்கம் ஏவும் ஒடுக்குமுறையை பிரதிபலிக்கிறது. மலம் அள்ளும் தொழிலுக்கு உட்படுத்தப்படுபவர்கள், அதற்கான காரணம், அதிகார மட்டங்கள் அதனை அலட்சியப்போக்குடன் அணுகுவது, சாதிய மனநிலை, நீதிமன்றங்களில் முன்வைக்கப்படும் வாதங்கள் என சமூக உரையாடலை முன்னெடுக்கும் ஒரு சிறந்த கோர்ட் டிராமாவாக படம் உருவாகியுள்ளது. பார்த்திபனுக்கு பின்புலம் யாரும் இல்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் லஞ்சம் வாங்கும் காவல் துறை, பாதிக்கப்பட்டோர் தரும் புகாரை வாங்க மறுக்கிறது. அவசர அவசரமாக கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, மிரட்டி உடலை நேரடியாக சுடுகாட்டில் எரித்து பிரச்னையை முடிக்க எத்தனிக்கிறது. கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத் தலைவரான பெத்தராஜ்(செல்வா சி), பார்த்திபனின் மரணத்தின் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை அறிந்து, மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கிறார். வேறுவழியின்றி காவல்துறை புகாரை பெற்றுக்கொள்கிறது. புகார் அளிப்பதற்கு கூட போராட்டங்களை நடத்த வேண்டியதாக உள்ளது என்ற சமூகத்தின் யதார்த்த மனநிலையை அப்படியே இந்த காட்சி நகலெடுத்துள்ளது.
ஒரு உயிரிழப்பு நடந்துவிட்டது. அதற்கான தீர்வுகளை முன்னெடுக்காமல் குற்றவுணர்வு ஏதுமின்றி தங்களுக்கு தொடர்பில்லை என்பது போல நடந்துகொள்கிறார்கள் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள். அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகியாக வரும் ஸ்ரீநாத்திடம் இருந்து , ‘நாங்களெல்லாம் மதிப்பிற்குரியவர்கள்’ என்று அடிக்கடி சொல்கிறார். இதன்மூலம் ஆதிக்க சாதிய மனநிலையை இயக்குநர் அப்படியே படம் பிடித்துள்ளார்.
வழக்கு தொடர்ந்ததற்காக அதிகார மையங்களில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் பணி ரீதியிலான ஒடுக்குமுறைகளை சந்திக்கிறார் இந்திராணி. அதுவே அவரை அறச்சீற்றம் கொண்ட பெண்ணாக மாற்றுகிறது. இந்திராணியாக வரும் நடிகை ரோகிணி தனது பாத்திரத்திற்கு தேவையான நிறைவான பங்களிப்பை வழங்கியுள்ளார். பெத்துராஜ் பாத்திரத்தில் நடித்த ஜி செல்வா, நிஜ வாழ்விலும் ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் கதாபாத்திரமாகவே கண்ணுக்கு தெரிந்தார்.
பார்த்திபன் இறந்த குடியிருப்பில் வசிக்கும் பார்வதி என்ற சுதந்திரமான, இளம் பெண்ணாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். அவர் அண்டை வீட்டாரை மீறி, மறைந்த பார்த்திபனுக்கு நீதி கிடைக்க உதவுகிறார். இதைத் தவிர வழக்கறிஞராக வரும் சண்முகராஜன், நீதிபதி உள்பட அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
“இதுவரக்கும் நாங்க மட்டும்தான் பீ, சாக்கடை அள்ளி செத்துருக்கோம், வேற எந்த சாதிக்காரங்களும் அப்படி செத்ததில்ல…எங்க பிள்ளைங்கள பெத்து வளர்த்து காவு கொடுத்துட்டு இருக்கோம்” என்று போலீசாரிடம் ஒரு பெரியவர் கோபமாக கூறுவதாகட்டும், என் மவன கொன்னதுக்கு அவங்க கோர்டுக்கு வந்து பதில் சொல்லனும்’ என்று ரோகிணி பேசுவதாகட்டும் சாதிய சமூகத்தின் மீதான சவுக்கடியாக உள்ளது.
இறுதியாக யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் காட்சியை வைத்து முடித்துள்ளார் இயக்குநர். இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதனை ஆவணப்படமாக மாற்றாமல் நேர்த்தியான திரைப்படமாக தந்து மக்களிடம் சென்று சேர்த்து இயக்குநர் தீபக்கிற்கு பாராட்டுக்கள்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஏவுகணை கொண்டு செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள சமூகம், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஏன் இன்னும் மனிதர்களை பயன்படுத்துகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் மலம் அள்ளும் தொழிலுக்காக, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற அடிப்படையாக கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தூய்மை பணியாளர் பணிக்கு கூட விளிம்புநிலை சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் போஸ்டர் ஒட்டுவதும், பணிக்கு தேர்ந்தெடுப்பது தற்போதும் நடைபெறுகிறது என்பது தற்போதைய சூழல்.
கழிவுநீர் தொட்டிக்குள் சுத்தம் செய்ய இறங்கிய 3 பேர் உயிரிழப்பு என நாளிதழ்களில் படித்துவிட்டு அதனை அப்படியே கடந்திருப்போம். எதனால் அது நடைபெற்றது, அதற்கு மாற்று என்ன என்பதை பற்றியெல்லாம் சிந்திக்க மறுத்திருப்போம். மலக்குழி மரணங்களை பார்வையாளனாய் கடந்து செல்லும் நாமும் ஒரு விட்னஸ்தான்.
நம்மிடம் இருந்துதான் மாற்றம் தொடங்க வேண்டும் என வெகுமக்களிடம் உரையாடலை ஏற்படுத்தும் முயற்சிதான் விட்னஸ் திரைப்படம். இதுபோன்ற திரைப்படங்கள் மக்களிடம் சென்று சேர்வதன் மூலம் மலக்குழி மரணங்கள் தொடர்பான விழிப்புணர்வுகள், அதுதொடர்பான மாற்றங்கள் உறுதியாக நிகழும் என நம்புவோம்.
– த.எழிலரசன்