மணிப்பூரில் நடந்து வரும் அவலங்களை அறிவதற்காக குகி பழங்குடியின தன்னார்வலர்கள் ‘புரட்சியின் குரல்’ என்ற செய்தித்தாளை தொடங்கியுள்ளனர்.
மணிப்பூரில மைத்தேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. மோதலை தூண்டும் வகையில் சமூகவலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, மே மாதம் 3-ம் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 3 மாதங்களாக, இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பான அனைத்து சிக்கல்களையும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இணையத் தடையால் அலுவலகங்கள், நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் இணைய சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் செல்போன்களுக்கான இணைய சேவை தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாது இணைய சேவையை பயன்படுத்த மேலும் பல கட்டுப்பாடுகளையும் மணிப்பூரை ஆளும் பாஜக அரசு விதித்துள்ளது. பிராட் பேண்ட் எனும் தரைவழி இணைய சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலைப் பகுதிகளில் பரவலாக வாழும் குகி மக்கள் மணிப்பூரின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளவும் தகவல் பரிமாற்றத்திற்காகவும் சொந்தமாக செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கியுள்ளர்.
‘ஸலேன் அவ்கின்’ (Zalen Awgin) என்ற பெயரில் தொடங்கியுள்ள இதன் அர்த்தம் ‘புரட்சியின் குரல்’ (the voice of the revolution). குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இதனைத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். அனைத்து கிராமங்களுக்கும் இந்த செய்தித்தாள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.







