திரிபுராவின் புதிய முதலமைச்சருக்கு பிரதமர் வாழ்த்து

திரிபுரா முதலமைச்சராக மாணிக் சஹா இன்று பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  திரிபுராவின் முதலமைச்சராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பிப்லப் தேப் திடீரென நேற்று…

திரிபுரா முதலமைச்சராக மாணிக் சஹா இன்று பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திரிபுராவின் முதலமைச்சராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பிப்லப் தேப் திடீரென நேற்று ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைநகர் அகர்தலாவில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், பாஜகவின் சட்டமன்றக் குழு தலைவராக மாணிக் சஹா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக அகர்தலாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், திரிபுரா முதலமைச்சராக மாணிக் சஹா பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் எஸ்.என். ஆர்யா அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் பிப்லப் தேப், மத்திய அமைச்சர் பிரதிமா பெளமிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணிக் சஹாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2016ம் ஆண்டு பாஜகவில் இணைந்தவரான மாணிக் சஹா, கடந்த 2020ம் ஆண்டு மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாணிக் சஹா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.