நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து!

நல்லாசிரியர்களின் தன்னலமற்ற கல்விச் சேவை மென்மேலும் சிறந்து தொடர மனதார வாழ்த்துகிறேன் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் M. தங்கராஜ் அவர்கள், தனது சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கியுள்ளார். கிராமப்புற மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்காக கதை சொல்லுதல், ஃபிளாஷ் கார்டுகள், ஆடியோ-விஷுவல் கருவிகள் மற்றும் ‘மாணவர் அமைச்சரவை’ மூலம் காய்கறித் தோட்டம் அமைத்து சத்துணவுக்குப் பயன்படுத்தும் புதுமையான செயல்வழிக் கற்றல் முறைகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தி வருகிறார்.

​மதுரை திருப்பரங்குன்றம் PM SHRI கேந்திரிய வித்யாலயா (No. 2) பள்ளி முதல்வர் J. அமுதா அவர்கள், கேந்திரிய வித்யாலயா அமைப்பில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். முன்னாள் NCC மாணவியான இவர், மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதோடு, அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுத்து கற்றல் வாய்ப்புகளையும் நவீன நடைமுறைகளையும் பகிர்ந்தளித்து, முதியோர் இல்லங்களுக்கும் சேவை செய்து முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

​புதுச்சேரி மேட்டுப்பாளையம் வி.வி.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் S. கணேசன் அவர்கள், தனது 34 ஆண்டுகால கல்விச் சேவையில் அறிவியல் பாடத்தை நாடகம், விளையாட்டு மற்றும் வாட்ஸ்அப், ஸ்மார்ட் இன்டராக்டிவ் டிவி, கூகுள் பார்ம்ஸ் போன்ற நவீன டிஜிட்டல் கருவிகளுடன் இணைத்துக் கற்பித்து வருகிறார். ஏற்கனவே மாநில மற்றும் சர்வதேச நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற இவரது புதுமையான கற்பித்தல் பணி போற்றுதலுக்குரியது.

​அர்ப்பணிப்புடன் உழைத்து தேசத்தின் எதிர்காலமான மாணவர்களைச் செதுக்கும் இந்த நல்லாசிரியர்களின் தன்னலமற்ற கல்விச் சேவை மென்மேலும் சிறந்து தொடர மனதார வாழ்த்துகிறேன்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.