மண்டல பூஜை: ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் – கற்பூர ஆழியில் ஜொலித்த சபரிமலை சன்னிதானம்!

மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் கற்பூர ஆழியில் ஜொலித்தது. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு வரும் 27ஆம் தேதி…

மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் கற்பூர ஆழியில் ஜொலித்தது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி
திறக்கப்பட்டு வரும் 27ஆம் தேதி பூஜை நடைபெறுவதை ஒட்டி 26ஆம் தேதி மாலை 6.30
மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்காக
பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள
தங்க அங்கி ஊர்வலம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள் : 12 மணி நேர போராட்டம் | கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை பத்திரமாக மீட்பு!

மண்டல பூஜைக்கு முன்பதாக சபரிமலை சன்னிதானத்தில் நேற்று கற்பூர ஆழி பவனி
வந்தது. கொடிமரம் அருகே வட்ட வடிவ பாத்திரத்தில் கற்பூரங்களை குவித்து வைத்து
அதில் தந்திரி கண்டரரு ராஜீவரு நெருப்பு வளர்த்தார். தொடர்ந்து பாத்திரத்தின்
இரண்டு பக்கமும் கம்பியை பிடித்து இழுத்து அசைத்த போது நெருப்பு மேலே உருண்டு
சென்றது.

தொடர்ந்து புலி வாகனத்தில் ஐயப்பன் வேடம் அணிந்த சிறுவன் வலம் வர சிவன்,
பார்வதி,விஷ்ணு, பிரம்மா, ராமர், சீதை வேடம் அணிந்த பலரும் ஐயப்பனை தொடர்ந்து
வந்தனர். அப்போது சன்னிதானத்தில் கூடியிருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா
என்று எழுப்பிய சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலித்தது.

வரும் 27ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை
திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம்
முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன்
ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.