ஆக்ரோஷமாக வந்த யானையை பாகன் கையசைத்து நிறுத்திய வீடியோ இணையத்தில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
நகரமயமாக்கல் காரணமாக காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக யானை, சிறுத்தை, புலி போன்ற உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை தேடி நகருக்குள் வருகின்றன, இதனால் வன உயிரினங்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளளில் யானை தாக்கியதில் சுமார் 2400 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பாகனின் கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகள் கூட மதம் பிடித்து மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக யானை தாக்குதலில் பாகன்கள் பலர் பலியான சம்பவமும் உண்டு.
இந்நிலையில் யானை மற்றும் பாகன் இடையேயான உறவை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அதில் சுற்றுலா பயணி ஒருவரும், கையில் குச்சியுடன் யானை பாகனும் நின்று கொண்டிருக்கின்றனர். யானை ஒன்று ஆக்ரோஷமாக அவர்களை தாக்குவதை போல் வருகிறது. திடீரென பாகன் கையை உயர்த்தி காட்டுகிறார். அதனை கண்ட யானை அப்படியே திரும்பி செல்கிறது. பாகனுக்கு பயந்து யானை பின்வாங்கி செல்கிறதா? அல்லது இருவருக்கும் இடையே உள்ள அன்பின் காரணமாக யானை திரும்பி செல்கிறதா என்ற விவாதம் ட்விட்டரில் நடைபெற்று வருகிறது.





