மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில் ‘மலையன் குஞ்சு’ என்ற படத்தின் சண்டைப் படப்பிடிப்பு காட்சிகளின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில் தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர்

தன்னுடைய எதார்த்த நடிப்பின் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பெற்றவர் ஃபகத். சமீபத்தில் ஓடிடி தளத்தில் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ‘C U SOON’ என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபகத் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’, ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இருவருடைய கூட்டணியில் ‘மலையன் குஞ்சு’ என்ற நான்காவது படத்தில் ஃபகத் நடித்துவந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கொச்சியில் நடைபெற்ற வந்தது. ஃபகத்தின் தந்தை பாசில் இப்படத்தைத் தயாரித்துவருகிறார். ‘மலையன் குஞ்சு’ படத்தில் இடம்பெறவுள்ள சண்டைக் காட்சிக்காக ஃபகத் பாசில் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் ஃபகத் பாசிலுக்கு முகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அவருடைய மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஃபகத் பாசில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஃபகத் பாசிலுக்கு பயப்படும் அளவுக்குப் பெரிய காயங்கள் எதுவும் இல்லை என்றும் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ‘மலையன் குஞ்சு’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
ஃபகத் பாசில் இந்த ஆண்டு ‘மாலிக்’, ‘ஜோஜி’, ‘பாட்டு’, ‘மலையன் குஞ்சு’ உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துவருகிறார்.







