கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் அறியப்படும் நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவராவார். இவர் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’ மற்றும் தனுஷ் உடன் ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அவர் சினிமா துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாகவும், இனிமேல் அவருடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அது ரூ.500 கோடி வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
அவர் சிறுவயது முதல் ரசித்து வளர்ந்த ஊர்வசி, ஷோபனா, கஜோல் உள்ளிட்ட நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததாகவும், அவர்கள் வழியே தானும் பின்பற்ற உள்ளதாகவும் மாளவிகா மோகனன் கூறினார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மாளவிகாவின் கிறிஸ்டி திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.







