சுவிட்சர்லாந்தை சேர்ந்த நடாஷா என்பவர் திருமண ஆடை வடிவமைப்பில் அணிந்து கொள்ளும் வகையில் கேக் ஒன்றை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் நடாஷா கோலின் கிம். இவர் ஒரு கேக் தயாரிப்பாளர் ஆவார். நடாஷா ஸ்வீட்டி கேக்ஸ் என்ற பேக்கரியை நடத்தி வருகிறார். இவர் வித்தியாசமான முறையில் கேக் வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக நடாஷா, திருமண ஆடை வடிவில், அணியக் கூடிய வகையில் கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த கேக் சுமார் 131.15 கிலோ கிராம் எடையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் கேக் கடந்த மாதம் 15ம் தேதியன்று சுவிட்சர்லாந்தின் பெர்னில் நடந்த சுவிஸ் உலக திருமண கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கண்காட்சிக்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. இந்த கேக் தற்போது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.
கின்னஸ் உலக சாதனையாளர்கள் நடாஷா வடிவமைத்த இந்த கேக் உடையின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ 68,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.
கேக்கின் கீழ் பகுதி ஒரு அலுமினிய சட்டகம் மற்றும் இரண்டு உலோக போல்ட்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆடையின் மேல் பகுதி சர்க்கரை பேஸ்ட் மற்றும் ஃபாண்டண்ட் கலவையைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சிறு பலகைகள் கேக் கீழே விழாமல் இருக்க செய்கின்றன.
இந்த திருமண வடிவிலான கேக் ஆடையை மாடல் அணிந்து நடந்து செல்லும்போது அந்த ஆடை அப்படியே இருப்பதை உறுதி செய்வதற்காக, ஆடையை அணிந்து எளிதாக நடக்க கேக்கின் அடிப்பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.







