மகா கும்பமேளா 2025 – திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் குடியரசுத் தலைவர்!

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நாளை குடியரசுத் தலைவர் புனித நீராடவுள்ளார்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு கடந்த 14-ம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளாவின்போது திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்கள், பொதுமக்கள் என சுமார் பலகோடி மக்கள் இதுவரை புனித நீராடியுள்ளனர்.

சமீபத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நாளை பிப்.10 புனித நீராடவுள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.