சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற உத்தரவையும், அதனடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட நில அளவை ஆணையரின் உத்தரவையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நில அளவீடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி, நவீன தொழில் நுட்பம் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் நில அளவீடு செய்ய வேண்டும். பணம் செலுத்திய 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும். தவறினால் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும். நில அளவீட்டுக்கு தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். நில அளவீட்டு பணிக்காக டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றவில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர் யூனியன் பொதுச் செயலர் ராஜா, தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “தனி நீதிபதி உத்தரவின்படி, சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக் கூடாது என நில அளவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசாணை எண் 10ன் படி அரசு ஊழியர்கள் ஓரிடத்தில் 3 ஆண்டுகள் சேவையை முடித்த பின்னரே பணி மாறுதல் செய்யப்படுவர். ஆகவே, சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற உத்தரவையும், இதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட நில அளவை ஆணையரின் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.