கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி – நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!

ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக் கோரி 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள், கடந்த பல ஆண்டுகளாக ஆடல், பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை காட்டி அனுமதி மறுக்கின்றனர். அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறினர்.

இதனைக்கேட்ட நீதிபதி,

சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யபடுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

மனுதாரர்கள் ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும். இதனால், உங்கள் கிராமம் செழிப்பாக இருக்கும் எனக்கூறி மனுக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.