#CellPhone தொலைந்து விட்டதா? #IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் – எப்படி தெரியுமா?

செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றிவிட்டாலும் ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம் செல்போனை கண்டுபிடித்துவிடலாம் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க…

Lost CellPhone? #IMEI number can be traced even if changed - National Cyber ​​Security Research Center info!

செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றிவிட்டாலும் ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம் செல்போனை கண்டுபிடித்துவிடலாம் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், https://cybercrime.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை இந்த இணையதளம் மூலமாகவோ, அல்லது ‘1930’ என்ற இலவச தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம். இதை கண்காணிக்க டிஜிபி அலுவலகத்தில் தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் மத்திய சாதன அடையாள பதிவேடு (சிஇஐஆர்), காலர் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி) ஆகிய புதிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் கூறியதாவது, “பெரும்பாலும் செல்போன் தொலைந்துவிட்டால், தொலைந்தது திரும்ப கிடைக்காது என்ற எண்ணத்தில் பலரும் விட்டுவிடுவார்கள். ஒருசிலர் மட்டுமே காவல் துறையிடம் புகார் அளிக்கிறார்கள். இவ்வாறு திருடுபோகும் செல்போன்கள் பல்வேறு சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்பதால் இதுகுறித்து புகார் அளிக்க வேண்டியது அவசியம்.

போலீசாரிடம் புகார் அளித்தாலும்கூட, செல்போனில் இருக்கும் 15 இலக்க சர்வதேச செல்போன் சாதன அடையாள எண்ணை (ஐஎம்இஐ) மாற்றிவிட்டால், செல்போனை கண்டுபிடிப்பது சிரமம் என்ற எண்ணம் உள்ளது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம், தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ எண், சிஇஐஆர் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.

இந்த ஐஎம்இஐ எண்ணில் எப்போதும் ஒரு ரகசிய குறியீடு இருக்கும். தொலைந்த செல்போனின் ஐஎம்இஐ எண்ணை யாராவது மாற்ற முயற்சிக்கும் போது, அதில் உள்ள அந்த ரகசிய குறியீடு மாறி, புதிதாக மாற்றப்பட்டுள்ள ஐஎம்இஐ எண் தவறானது என சிஇஐஆர் பதிவேட்டுக்கு உடனே குறுந்தகவல் அனுப்பிவிடும். ஐஎம்இஐ எண்ணை மாற்ற முயற்சிக்கும் நபரின் அப்போதைய லொக்கேஷனும் சிஇஐஆர் பதிவேட்டுக்கு சென்றுவிடும். செல்போன் தொலைந்ததாக புகார் தரப்பட்டுள்ள காவல் நிலையத்துக்கு இந்த தகவல்களை சிஇஐஆர் அனுப்பிவிடும். எனவே, ஐஎம்இஐ எண்ணை மாற்றினாலும், காணாமல்போன செல்போனை கண்டுபிடிக்க முடியும்.

அதேபோல், செல்போனில் அழைப்பவரின் பெயரை தெரிந்துகொள்ள பலரும் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்துகின்றனர். இதில், சம்பந்தப்பட்ட அழைப்பாளர் தனது பெயரை எவ்வாறு பதிவு செய்துள்ளாரோ, அந்த பெயரைதான் ‘ட்ரூகாலர்’ காண்பிக்கும். இதனால், ED (அமலாக்கத் துறை), சிபிஐ என்பதுபோல பதிவு செய்து வைத்தும், சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் காலர் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி) என்ற திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில், அழைப்பாளர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பெயரை பதிவு செய்ய முடியாது. ‘கேஒய்சி’ படிவத்தில் என்ன பெயர் கொடுத்து, சிம்கார்டு வாங்குகிறோமோ, அந்த பெயரைதான் இது காண்பிக்கும். தவிர கூடுதலாக வேறு எந்த தகவலும் இதில் காட்டப்படாது. இத்திட்டம் அடுத்த ஆண்டு நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

இவ்வாறு தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.