எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது எனவும், மக்களவைத் தோ்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளது என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாா் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் நாளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால், மக்களவைத் தேர்தலில் தாங்கள் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்று பாஜக அஞ்சுகிறது. எனவே, மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் முடிவை, மத்திய பாஜக அரசு மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று கடந்த சில மாதங்களாகவே கூறி வருகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு எதிராக அதிகபட்ச எண்ணிக்கையில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென்பதே எனது விருப்பம்.
இதில் எனக்கு தனிப்பட்ட நோக்கங்கள் எதுவும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறேன். பீகாரில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும். விளிம்புநிலை மக்கள் உள்பட சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு இத்தரவுகள் உதவும்.
இந்த நடைமுறையை இதர மாநிலங்களும் பின்பற்றும் என நம்புகிறேன். பாஜக உள்பட அனைத்து கட்சித் தலைவா்களின் ஒருமித்த கருத்துடன்தான், பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.







