முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சிறுமியின் தாயார் தமிழ்நாடு அரசுக்கும், தொடர்ந்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டானியாவுக்கு ஒன்பது வயதாகிறது. அவர் வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி டானியா மிக அரிய வகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவது குறித்த செய்தி, ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழகஅரசு செய்து தரப்படும் என கூறியிருந்தார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குழந்தையின் வீடு தேடி சென்று அரசு நலத்திட்ட உதவிகளான மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப நல அட்டை உள்ளிட்டவை வழங்கினார். பின்னர் 17-ஆம் தேதி மாலை திருப்பெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8மணி நேரம் நடைபெற்ற உயர் தொழில் நுட்ப முக அறுவை சிகிச்சையானது மிகவும் நல்ல முறையில் செய்யப்பட்டது. அதற்குப் பின் 5 நாட்கள் ஐசியு வார்டில் சிறுமி டானியா தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். பின்னர் 6-வது நாள் ஐசியு -வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போது, சிறுமி டானியாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
அதற்குப் பிறகு சுமார் 15 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த டானியா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், இன்று காலை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் தனது இல்லத்திற்கு சென்றார்.
அவரை பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மேலும் 6 மாதத்திற்கு சிறுமி டானியாவிற்கு முகம் சீரமைப்பு குறித்து மேல் சிகிச்சையானது தொடர்ந்து வழங்கப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தன் மகளுக்கு உதவிய தமிழ்நாடு அரசுக்கும், தொடர்ந்து செய்தி வெளியிட்ட நியூஸ் 7 தமிழுக்கும் டானியாவின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.









