தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைத்தால் அதை செய்வார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழ்நாடு பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருநெல்வேலி பாஜக சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய அவர், “தற்போதைய நிலையில் பல்வேறு காரணங்களால் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. 3 விஷயங்களை மட்டும் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆகியிருப்பார்” என்றவர், தனித் தமிழ்நாடு தொடர்பாக திமுக எம்.பி ஆ.ராசா பேசியது குறித்தும் பதில் கருத்து தெரிவித்தார். 

நாங்களும் தமிழ்நாட்டை ஆந்திரா போல இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கேட்போம். 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டால் இரண்டிலும் பாஜக முதலமைச்சராக ஆட்சிக்கு வர முடியும் என்று குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், “நிர்வாக வசதிக்காக அவ்வாறு பிரிக்கலாம். தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். இப்போது பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்.” என்றார்.






