முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சிக்கு சட்ட வல்லுநர்கள் உறுதுணையாக இருப்பார்கள்- அமைச்சர் ரகுபதி

முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சிக்கு சட்டவல்லுநர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக…

முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சிக்கு சட்டவல்லுநர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பெருங்குடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக இணை வேந்தரும், சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, துணைவேந்தர் சந்தோஷ்குமார், உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், முன்னாள் நீதிபதி கிருபாகரன், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தெற்காசியாவின் முதல் சட்ட பல்கலைக்கழகமாக, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கடந்த 1997-ல் தொடங்கப்பட்டது. இன்று வெள்ளிவிழா காணும் சட்டப்பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. இதன் மூலம் தாய்மொழியில் பயிலும் வாய்ப்பையும் கருணாநிதி ஏற்படுத்தித் தந்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சட்டக்கல்லூரியில் சேருவதற்கு அதிகளவில் போட்டி இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் அதிகமான மாணவர்கள் சட்டப் படிப்புகளில் சேருவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டப்படிப்பு தங்களுக்கு பாதுகாப்பான படிப்பு என்ற எண்ணம் மாணவியருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியர் அதிகம் விரும்பும் படிப்பாக சட்டப்படிப்பு உள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் நீதித்துறைக்கு முதலமைச்சர் ஆற்றிய பணி அதிகம். சென்னை உயர்நீதிமன்றத்தின் கனவுகளை நினைவாக்க முதலமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

சட்டத்தின் ஆட்சி வேண்டும், சட்டம் தான் மேன்மையானது என்ற நோக்கில் தான்
அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சிக்கு உறுதுணையாக சட்ட வல்லுநர்கள் இருப்பார்கள் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.