42 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் CUET – PG தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இந்தியாவில் உள்ள JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 42 மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Com., MBA., M.Sc., உள்ளிட்ட முதுகலை ( PG ) படிப்புகளில் சேர பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
வரும் கல்வியாண்டுக்கான ( 2022-2023 ) பொதுநுழைவுத் தேர்வுக்கு ( CUET – PG ), இன்று முதல் வரும் ஜூன் 18-ம் தேதி வரை https://cuet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுக்கு, ஒற்றைச் சாளர முறையில் ( Single Window ) விண்ணப்பிக்கலாம் என்றும், பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்றும் NTA தெரிவித்துள்ளது.
இதுவரை மத்திய பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்த நிலையில், இனி ஒரே நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்பட உள்ளது.
CUET – UG தேர்வைப் போல் CUET – PG தேர்வும் கணிணி அடிப்படையிலான தேர்வாக ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும் என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் NTA தெரிவித்துள்ளது.








