2021ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் எழுத்தாளர் அஸ்வகோஷ் மற்றும் எழுத்தாளர் வண்ணநிலவன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுகிறது.
புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நினைவாக கலை மற்றும் இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் ஆண்டுதோறும் ”விளக்கு விருது” வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கெளரவமாக இவ்விருது கருதப்படுகிறது. தமிழ் இலக்கிய உலகின் படைப்பாளிகள் சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, ஞானக்கூத்தன், அம்பை, ராஜ்கெளதமன், சுகிர்தரானி உள்ளிட்ட பலரும் விளக்கு விருதினைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளுக்குரியவர்களை, எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் எழுத்தாளர் அஸ்வகோஷ் மற்றும் எழுத்தாளர் வண்ணநிலவன் ஆகிய இருவருக்கு வழங்கப்படுகிறது.
எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராஜேந்திரசோழன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், இலக்கியம், நாடகம், தத்துவம் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். 30க்கும் மேற்பட்ட படைப்புகளை இலக்கிய உலகிற்கு தந்தவர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தாளர் வண்ணநிலவன், புதினம், சிறுகதை, கவிதை என பல சீரிய படைப்புகளை தமிழ் இலக்கிய உலகிற்குப் பரிசளித்தவர்.
2021ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதுகள் எழுத்தாளர் அஸ்வகோஷ் மற்றும் வண்ணநிலவனுக்கு வழங்கப்படுவது தமிழ் எழுத்துலகை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







