புதிய காட்சிகளுடன் ஓடிடியில் வெளியானது ‘லால் சலாம்’!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவானன ‘லால் சலாம்’ ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ”வை ராஜா வை” என்ற படத்தையும் இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படம் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் நடித்திருந்தார்.

மேலும் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. பல காரணங்களால் படத்தின் ஓடிடி வெளியீடு தாமதமாகி வந்தநிலையில், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிஉள்ளது. இதில் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.