சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு இதுதான் காரணம்- ஓபிஎஸ் ஆதரவாளர் குமுறல்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் குறித்தும்  அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்பது…

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் குறித்தும்  அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்பது உள்பட பல்வேறு புகார்களை தெரிவித்து வந்த கோவை செல்வராஜ் உள்ளிட்டவர்களை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக முறையாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அழைத்து பேசவில்லை எனக் குற்றம்சாட்டினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை வைத்தே கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார் என்றும் அவர் கூறினார். இவற்றை அன்றே ஓபிஎஸ் வெளியில் பேசியிருந்தால் கட்சி பிளவு பட்டிருக்கும் என்று கூறிய கோவை செல்வராஜ்,  துரோகங்களை தாங்கிக்கொண்டு ஓ பன்னீர் செல்வம் கட்சி பணி செய்தார் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர்களுக்கு எதிராக உட்கட்சியிலேயே சதி செய்தவர்களின் பட்டியலை தாம் வெளியிடப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு
துறையில் புகார் அளிக்கப் போவதாகவும் செய்தியாளர்களிடம் கோவை செல்வராஜ்
கூறினார். ஆர்.பி.உதயகுமார் தனது வருமானத்தை மீறி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துத்துள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய கோவை செல்ராஜ் வரும் திங்கட்கிழமை அதிமுகவின் புதிய நிர்வாகிகளை ஓ பன்னீர் செல்வம் நியமிப்பார் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.